

இலவசங்களை வாங்கியே தமிழக மக்களுக்கு பழக்கமாகிவிட்டது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை துறைமுக பொறுப் புக் கழகம் சார்பில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனையை விளக்கும் ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற கருத்தரங்கம் நேற்று நடத்தப்பட்டது. நரேந்திர மோடி அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச் சியில் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் பி.ரவீந்திரன், துணைத் தலைவர் சிரில் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: பொதுவாக மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் மக்களை சந்திப்பதில்லை. ஆனால், அனைத்து அமைச்சர்களும் எம்.பி.க்களும் மக்களை சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு வரை இந்திய மக்களில் 4 கோடி பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது. ஆனால், தற்போது வங்கிக் கணக்கு வைத்துள்ளோர் எண்ணிக்கை 29 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தக் கணக்குகள் மூலம் ரூ.65 ஆயிரம் கோடி வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 12 ரூபாயில் விபத்துக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாதத்துக்கு ஒரு ரூபாய்தான் செலுத்த வேண்டும். அதையும் இலவச மாக தரக்கூடாதா என தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு இலவசங்கள் வாங்கியே பழக்கமாகிவிட்டது. மிக்சி, கிரைண்டர் என இலவசங்களை வாங்கிவிட்டனர். பிரதமர் மோடியோ, இலவசங்களுக்காக மக்கள் கையேந்தக் கூடாது என்று நினைக்கிறார். 60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் பெறும் அடல் பென்ஷன் திட்டம், பெண் கருச் சிதைவுகளை தடுக்க செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகிறது.
முத்ரா வங்கி திட்டம் மூலம் 8 கோடி பேர் தொழில் தொடங்க கடன் பெற்றுள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். மேலும் ஸ்டான்ட்-அப் இந்தியா திட்டம் மூலமும் தொழில் தொடங்க கடன் தரப்படுகிறது. நாட்டில் விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ் வாறு அமைச்சர் பேசினார்.