

மது விற்பனை நேரம் குறைப்பு மற்றும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அரசுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.70 முதல் ரூ.80 கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
கிராமப்புறங்களில் உள்ள கடைகளின் மூலம் நாளொன்றுக்கு ரூ.30 ஆயிரம் தொடங்கி, நகர்ப்புறங்களில் உள்ள கடைகளில் அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ.10 லட்சம் வரை அரசுக்கு வருவாய் கிடைக் கிறது. இதனால், டாஸ்மாக்கின் மூலம் ஓர் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 10 மணிக்கு திறப்பதற்கு பதிலாக 12 மணிக்கு திறப்பதா லும், 500 கடைகளை மூடுவதா லும், அரசுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. ஏனென்றால், டாஸ்மாக் கடைகளால் ஒரு நாளில் கிடைக்கும் வருவாயில், 5 சத வீதம் கூட காலை 10 முதல் 12 மணி வரை கிடைக்காது. மாலை நேர விற்பனைதான் அதிகமாக இருக்கும்.
இழப்பு
இதனால், அரசுக்கு நாளொன் றுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையே இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன்படி பார்த்தால், ஓர் ஆண்டுக்கு 300 கோடி வரை இழப்பு ஏற்படும். இந்த தொகை மூடப்படுகிற கடைகளின் வருவாயை பொறுத்து மாறுபடவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.