Published : 20 May 2017 11:41 AM
Last Updated : 20 May 2017 11:41 AM

டாஸ்மாக் போராட்டம்: பெண்கள், மாற்றுத்திறனாளிகளை தாக்குவதா?- காவல்துறைக்கு ராமதாஸ் கண்டனம்

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்கும் பெண்களை, மாற்றுத்திறனாளிகளை போலீஸ் தாக்குவது கடுமையான கண்டனத்திற்குரியது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

“ மதுவை விற்றுத் தான் நிர்வாகம் நடத்த வேண்டும் என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தமிழக அரசு, அதற்காக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்பை மதிக்காமல் அப்பாவி மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

மக்களின் உணர்வுகளை மதிக்காமல் அறவழியில் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகிலுள்ள அழிஞ்சி குப்பம் கிராமத்தில் ஏற்கனவே ஒரு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு மதுக்கடையை அழிஞ்சிக்குப்பத்தில் டாஸ்மாக் நிர்வாகம் திறந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வாழும் மக்கள் அறவழியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வேறுவழியில்லாத நிலையில் தான் நேற்று அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு மதுக்கடைகளை மூடக் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இத்தகைய போராட்டங்களை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி தான் காவல்துறையினர் கையாண்டிருக்க வேண்டும்.

மாறாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாற்றுத் திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி கைது செய்திருப்பது காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.

அழிஞ்சி குப்பத்தில் போராடிய பெண்களை காவல்துறையினர் கைது செய்து இழுத்துச் செல்லும் புகைப்படங்களை தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது. போராட்டக் காரர்களிடம் காவல்துறை எந்த அளவுக்கு மிருகத்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அந்தப் படம் தான் சாட்சி ஆகும். அழிஞ்சிக்குப்பம் போராட்டத்தில் லேசான வன்முறை ஏற்பட்டது உண்மை தான்.

இதற்கு காரணம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தானே தவிர பொதுமக்கள் அல்ல. அழிஞ்சிக்குப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

மதுக்கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் மனு அளித்தால் அதன் மீது 3 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் போராட்டம் நடத்தினால் மதுக்கடையை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

அதை மதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால் எந்த பிரச்சினையும் எழுந்திருக்காது. மாறாக மாவட்ட நிர்வாகம் மக்கள் உணர்வுகளை மதிக்காமல் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று துடித்தது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.

மதுக்கடைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மதுக்கடைகளை மூடும் விஷயத்தில் விதிகளை பின்பற்றினால் மட்டும் போதாது; மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவுரையை தமிழக அரசு மதிக்க வேண்டும். ஆனால், மது விற்பதை மட்டுமே முதன்மைத் தொழிலாக கருதும் தமிழக ஆட்சியாளர்களின் காதுகளில் இந்த அறிவுரை விழவில்லை.

அதனால் தான் மதுவுக்கு எதிராக போராடும் மகளிரை காவல்துறையினரை முரட்டுத்தனமாக தாக்குகின்றனர். திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது கொடூரமான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பெண்ணைக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் கன்னத்தில் அறைந்ததால் அவரது செவித்திறன் பாதிக்கப் பட்டது.

இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டும் பாண்டியராஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேபோல், சிவகாசியில் கடந்த 5-ஆம் தேதி மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ம.க. மாநிலத் துணைத்தலைவர் திலகபாமா உள்ளிட்டோரை காவல்துறையினர் தாக்கி கைது செய்து சிறையில் அடைத்தனர். போராட்டம் நடத்திய பெண்களை காவல்துறையினர் தரக்குறைவாக பேசி இழிவுபடுத்தினர்.

இத்தகைய அணுகுமுறைகளின் மூலம் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பெண்களை முடக்கி விடலாம் என்று தமிழக அரசு தப்புக்கணக்கு போடுகிறது.

மதுவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எழுந்துள்ள புரட்சியை பெண்கள் தான் தலைமையேற்று நடத்தி வருகின்றனர். அடக்குமுறைகள் மூலம் இப்போராட்டத்தை ஒடுக்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

எங்கெல்லாம் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துகிறார்களோ அங்கெல்லாம் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். இந்திய விடுதலை நாளுக்குள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும்”

என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x