

பயனற்ற இசைத் தட்டுகளில் தேசத் தலைவர்களின் உருவப் படங்களை தத்ரூபமாக வரைந்து கம்பம் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் அசத்தி வருகிறார்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே கே.புதுப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரிய ராகவும், ஜே.ஆர்.சி. ஆலோசகராக வும் பணியாற்றி வருபவர் என். ராஜேந்திரன். இவர் மாணவர் களிடம் சமூக விழிப்புணர்வை ஏற் படுத்தும் நோக்கில், இயற்கை வளங் கள் அழிக்கப்படுவதால் மனித வாழ்க்கைக்கு ஏற்படும் ஆபத்துகள், பஸ் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து துண்டு மரப்பலகைகளில் ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். மேலும் பயனற்றவை என்று குப்பையில் வீசி எறியும் பழைய சிடி, டிவிடி, ரிக்கார்டு பிளேயர் இசைத்தட்டுகளில் அரசி யல் கட்சித் தலைவர்கள், தேசத் தலைவர்கள் உள்ளிட்டோரின் உருவப் படங்களை தத்ரூபமாக வரைந்து அசத்தி வருகிறார்.
தான் வரைந்த ஓவியங்களை பள்ளியில் நடைபெறும் கண்காட்சியில் மட்டுமல்லாமல், வெளியிடங் களில் நடைபெறும் கண்காட்சிகளி லும் வைத்து பாராட்டு பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஆசிரியர் என்.ராஜேந்திரன் கூறிய தாவது: மரங்கள் வெட்டப்படுவதால் வனவிலங்குகள் அழிவதோடு, மழையில்லாமல் தண்ணீர் பஞ்ச மும் ஏற்படுகிறது.
மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க மாணவப் பருவத்திலேயே சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் வரும் காலங்களில் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
புத்தகங்கள் வாயிலாக பாடங்களை மாணவர்களுக்கு சொல்லித் தருவதை விட ஓவியங்கள் மூலம் வரைந்து காட்டினால் அவர்கள் உடனே புரிந்துகொள்வர். தற்போது மாணவர்கள் சமுதாய உணர்வுடன் இயற்கை வளங்களை காத்தல், போக்குவரத்து விதிகளை மதித்தல், தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்பான ஓவியங்களை வரைய கற்று வருகின்றனர். பயனற்றவை என்று எதையும் தூக்கி எறியாமல், அதில் அழகிய ஓவியங்களை வரைந்து வைத்தால் அந்த ஓவியங் களை வருங்கால சந்ததியினர் பொக்கிஷமாக பாதுகாத்துக் கொள்வர்.
தேனி மாவட்டத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் தனியார் பள்ளிகளே வெற்றி பெற்றன. தற்போது அரசுப்பள்ளி மாணவர்களும் வெற்றி பெறும் நிலையை உரு வாக்கி உள்ளேன். இதற்காக தலைமை ஆசிரியர் எங்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
அடுத்த ஆண்டு நான் ஓய்வு பெற உள்ளேன். அதன் பின் ஏழை மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு ஓவியங்களை வரைய இலவசமாக கற்றுத் தருவேன் என்றார்.