

பரமக்குடி முருகன், பால்கடை சுரேஷ் கொலை வழக்குகள், ஆலம்பட்டி பைப் வெடிகுண்டு தொடர்பாக தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கிடம் சிபிசி ஐடி ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் முருகன் (45). பாஜக நிர்வாகியான இவரை கடந்த மார்ச் 19-ம் தேதி மர்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இக்கொலை வழக்கு குறித்து விசாரிப்பதற்காக தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை கடந்த திங்கள்கிழமை முதல் 7 நாள்களுக்கு சிபிசிஐடி போலீசார் தங்கள் காவலில் எடுத்துள்ளனர்.
மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன் இருவரிடமும் சிபிசிபிஐடி எஸ்.பி. அன்பு, ஏடிஎஸ்பிக்கள் கார்த்திக்கேயன், மாரிராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை தனித்தனியாக பரமக்குடிக்கு அழைத்துச் சென்று முருகன் கொலை வழக்கு, ஆலம்பட்டிக்கு அழைத்துச் சென்று பைப் வெடி குண்டு வழக்கு, மதுரை நேதாஜி சாலைக்கு அழைத்துச் சென்று பால்கடை சுரேஷ் கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவங்களை நிகழ்த்திய முறை குறித்தும் சிபிசிஐடி போலீசார் கேட்டறிந்தனர்.
இந்நிலையில், சிபிசிஐடி ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் வெள்ளிக்கிழமை மதுரை வந்தார். அவர் சிபிசிஐடி அலுவலகத்திற்குச் சென்று போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்து எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இந்த வழக்குகள் குறித்து போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார். இதையொட்டி சிபிசிஐடி அலுவலகம் அருகே பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.