

தமிழகத்தின் பல்வேறு கிராமங் களில் ஈஷா சார்பில் நடைபெற்ற கைப்பந்து, எறிபந்து போட்டிகளின் இறுதி ஆட்டம் இன்று (செப்.4) கோவையில் நடைபெறுகிறது.
கோவை ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈஷா கிராமோத்சவம் கிராமிய பாரம்பரிய விளையாட்டுகள், நவீன விளையாட்டுகள், கலாச்சார கொண்டாட்டங்கள் ஆகியவற்றை கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் கைப்பந்து, எறிபந்து போட்டிகள் நடைபெற்று, மாவட்ட அளவில் தேர்வாகும் குழு, இறுதிச் சுற்றில் பங்கேற்கும். கோவை கொடீசியாவில் இறுதிச் சுற்று போட்டிகள் இன்று நடை பெறுகின்றன.
வெற்றி பெறும் கைப்பந்து அணிக்கு ரூ.1 லட்சமும், எறிபந்து அணிக்கு ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். மாலையில் நடை பெற உள்ள விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ராஜீவ் வர்தன் சிங் ரத்தோர், முதல் பெண் காவல் துறை அதிகாரியும் புதுச்சேரி ஆளு நருமான கிரண்பேடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங் கேற்க உள்ளனர்.
கோவை கொடீசியாவில் இன்று காலை 9 மணி முதல் கிராமிய உணவுத் திருவிழா, பறையாட்டம், சிலம்பாட்டம், கட்டை குழல், ராஜா ராணி ஆட்டம், ஜம்பை மேளம், ஒயிலாட்டம், கணியன் கூத்து, சேர்வை ஆட்டம், மாடு மயில், கிழவன் கிழவி, தோடர்கள் (பழங்குடியினர்) ஆட்டம், வில்லுபாட்டு, துடும்பாட்டம், பம்பை ஆட்டம், கலி ஆட்டம், தோல் பாவை கூத்து, கொக்கிளி கட்டை, காவடி ஆகியவை நடைபெற உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.