

காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தைக் கண்டிக்க அமித்ஷா, சோனியா முன்வராதது ஏன்? என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நீரைத் தமிழகத்திற்குத் தர முடியாது என கர்நாடக சட்டமன்றத்திலும், சட்டமன்ற மேலவையிலும் தீர்மானங்கள் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் ஒரேமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
காவிரி நீரை உடனடியாகத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 3 வாரத்திற்குள் மூன்று முறை ஆணை பிறப்பித்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஆணையை வெளிப்படையாக மீறுவதின் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான வகையில் கர்நாடக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜகவைச் சேர்ந்தவருமான ஜெகதீஷ் ஷெட்டர் தீர்மானத்தை முன்மொழிய முதல்வரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சித்தராமையாவின் முழுமையான ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்திற்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் அறைகூவல் விடும் வகையில் கர்நாடகத்தைச் சேர்ந்த தங்களது கட்சிகள் நடந்துகொள்வதைக் கண்டிக்க பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் முன்வராதது ஏன்? மற்ற அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களும் வாய்மூடி மெளனம் சாதிப்பது ஏன்?
காவிரிப் பிரச்சினையில் தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்படும் இக்கட்சிகளைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள உணர்வு படைத்தத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.