

விவசாயிகள் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக விவசாயி பாலாற்றின் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இறந்த விவசாயியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் பாதிக்கப்படுவது பாலாற்றை நம்பியிருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களும், அப்பகுதி பொது மக்களும் தான். இதனை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் ஆந்திர அரசின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து குரல் கொடுத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.
தற்போது ஆந்திராவில் பெய்து வருகின்ற கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் வாணியம்பாடி அருகே புல்லூரில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் அதிகரித்துக் கொண்டு இருந்தது. இந்த தடுப்பணையின் உயரத்தை ஆந்திர அரசு உயர்த்தியதால் தடுப்பணையிலிருந்து தண்ணீரை விவசாயத்திற்கு பெற முடியாத சூழல் உருவாகும்.
இதனால் தான் செய்த விவசாயம் பாதிக்கப்படுவதோடு, விவசாயத்திற்காக தான் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் போகும் என்று வேதனைப்பட்ட வாணியம்பாடி, ராமநாயக்கன் பேட்டை அருகே உள்ள சின்னபள்ளத்தூரை சேர்ந்த விவசாயி சீனிவாசன் மனம் உடைந்து அந்த தடுப்பணையில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் வேதனைக்குரியது.
இது போன்ற சம்பவங்கள் இனியும் தொடரக் கூடாது. விவசாயிகள் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு குறிப்பாக தண்ணீர் பிரச்சினையை தீர்த்து, விவசாயக் கடனை தள்ளுபடி செய்து தேவையான அனைத்து நல்ல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
மேலும் தற்போது தற்கொலை செய்துகொண்ட விவசாயின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.