

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மதுரையில் இன்று (திங்கள்கிழமை) ரயில் மறியலுக்கு முயன்ற மக்கள் நலக் கூட்டணியினர் நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர். போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதுரை ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற இருந்தது.
பெரியார் நிலையத்திலிருந்து பேரணியாக வந்த மக்கள் நலக் கூட்டணியினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
போராட்டக் குழுவினரை தடுப்பதற்காக ரயில்வே நிலையத்தின் முன் போலீஸார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். தடுப்பு வேலிகளை தாண்டி போராட்டக் குழுவினர் ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றனர்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
அவர்களை தடுத்த போலீஸார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்ட துணை தலைவர் சார்லஸை கடுமையாகத் தாக்கினர். அவர் மயக்கமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக் குழுவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுப்பு வேலிகளை தூக்கியெறிந்து விட்டு ரயில் நிலையத்துக்குள் நுழைந்தனர்.
ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் முழுமையாக அடைக்கப்பட்டதால் அங்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி வந்த போராட்டக்குழுவினர் ரயில் நிலையத்தின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை ரயில்வே சந்திப்பு முன்னாள் திரண்ட பல்வேறு கட்சியினர் | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.