Published : 05 Nov 2013 05:48 PM
Last Updated : 05 Nov 2013 05:48 PM

கோவை: யானைகளை மறிக்கும் புதிய மாளிகை - அனுமதித்தது யார்?

காட்டு யானைகளின் வழித்தடத்தை, பிரம்மாண்ட கட்டடங்கள் ஆக்கிரமித்து, மின்சார வேலிகளும், அகழியும் அமைத்துவிடுதால்தான், அவை திசை மாறி, ஊருக்குள் புகுந்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன.

யானை வழித்தடத்தில் பிரம்மாண்ட பங்களாவைக் கட்டி, வெளி உலகுக்குத் தெரியாமல், யாருடைய இடையூறும் இல்லாமல் புதுமனை புகுவிழாவும் அரங்கேறி இருக்கிறது என்பது புது தகவல்.

தமிழகத்தின் அரணாக இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலை. இதையொட்டியுள்ள கிராமப் பகுதிகளை, மலைப்பகுதி கிராமங்கள் என்ற சிறப்புப் பகுதிகளாக அறிவித்து, அதில் கட்டிடங்களோ, வேறு கட்டுமானங்களோ எழுப்பவேண்டுமென்றால் உள்ளூர் திட்டக் குழுமத்திடமோ, மலைப்பகுதி மேம்பாட்டுக் குழுவிடமோ அனுமதி பெற்றால் மட்டும் போதாது, சென்னையில் உள்ள மலைப் பகுதி மேம்பாட்டுக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

அதில், வருவாய்த்துறை, கனிமவளத்துறை, வனத்துறை, வேளாண் பொறியியல் துறை என, அனைத்துத் துறையினரிடமும் தடையில்லாச் சான்று பெற்றால்தான், இது சாத்தியமாகும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. இதையெல்லாம் மீறி, எப்படித்தான் இவர்களெல்லாம், இவ்வளவு பிரம்மாண்ட கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று வருகின்றனரோ? என்று வியக்கும் வண்ணம், மலைப் பகுதிகளில் கட்டிடங்கள் எழுப்புவது, சமீப காலங்களில் சகஜமாகிவிட்டன.

கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை பல்வேறு அமைப்புகளின் கல்வி நிலையங்கள், ஆன்மீக மையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆக்கிரமித்துள்ளன. அந்த வரிசையில், ஆலாந்துறை நாதகவுண்டம்பாளையம் அருகே, யானைகள் விளையாடும் மலைப் பகுதியில், அமர்க்களமாக ஒரு பிரம்மாண்ட கட்டிடம் உருவாகி, கடந்த திங்கள்கிழமை புதுமனை புகுவிழாவும் நடந்துள்ளது. பல ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம், சொகுசான தங்கும் விடுதி என்றும்… இல்லையில்லை ஆசிரமம் என்றும், வி.ஐ.பி. பங்களா என்றும், பல்வேறு கருத்துகள் உலாவுகின்றன. இந்த விஷயம் கேள்விப்பட்டு, நாமே அந்தப் பகுதிக்குச் சென்றோம்.

கோவையிலிருந்து சிறுவாணி சாலையில் 20 கி.மீ., தொலைவில் உள்ளது ஆலாந்துறை. இங்கிருந்து 2 கி.மீ., நாதகவுண்டம்பாளையம். மூன்று திக்கிலும் அடர்ந்த மலைக் காடுகள் நிரம்பிய கிராமம். இதிலிருந்து, வடக்கே 5 கி.மீ., தூரம் ரங்கசாமி கோயில். முழுக்க விவசாயம் மட்டும் நடக்கும் இப் பகுதியிலிருந்து, அடர்ந்த வனப் பகுதி துவங்கி விடுகிறது. இதன் கடைக்கோடியில்தான், அந்த பிரம்மாண்ட கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது.

இங்குள்ள விவசாயிகள் பேச்சும் இதைப்பற்றியேதான் இருக்கிறது. சில விவசாயிகளிடம் பேச்சு கொடுத்தோம். 'இந்த பூமியை, பத்து வருஷத்துக்கு முந்தி, ஒரு ரியல் எஸ்டேட்காரர், பல விவசாயிகளிடமிருந்து வாங்கினார். மொத்தம் 60 ஏக்கர். ஒரு ஏக்கர் சில ஆயிரங்களுக்கே வாங்கின அவர், போன வருஷம் இங்குள்ள உள்ளூர் பிரமுகர்கள் இருவரிடம், விற்றுக் கொடுக்கச் சொன்னார். அவர்கள், யாருக்கு விற்றார்களோ தெரியாது. இந்த 60 ஏக்கருடன், மேலும் 30 ஏக்கர் நிலத்தை வாங்கி, எல்லை முழுக்க மின் வேலி போட்டுவிட்டார்கள்.

ஆறு மாதத்தில்…

இந்த ஒரு வருஷத்தில், இங்குள்ள நீரோடை, நீர்வழித்தடம், யானை வழித்தடம் அனைத்தையுமே மறித்து மண் ரோடு போட்டார்கள். பிறகு ஆறே மாசத்தில், இப்படியொரு கட்டிடம் கட்டிவிட்டார்கள். இந்த வேலைகளை முன்னின்று செய்பவர்கள் இருவர், ஆலாந்துறை பேரூராட்சியில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள். இந்த ஒரு கட்டிடத்திற்காக, தார்ச்சாலை போடவும் பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டுவிட்டதாகக் கேள்வி' என்றனர்.

இந்தக் கட்டிடத்தின் முகப்பில், மிகப்பெரிய மரத்தின் மீது ஒரு ஓட்டுக்குடில் இருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அது முழுக்க முழுக்க கான்கிரீட் தூண்களால் ஆக்கப்பட்டு, பிறகு பிரம்மாண்ட மரம் போல், செட்டப் செய்யப்பட்டதாம். இதற்குள், நீருற்றுக்கள், நீச்சல்குளம் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

விவசாயி ஒருவர் கூறுகையில், 'இந்த செட்டிங் வீடு, முதலில் இங்கிருந்து, 50 மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டது. அதை வனத்துறையினர், விதிமீறல், வனத்திலிருந்து 500 மீட்டருக்குள் எந்த கட்டுமானமும் கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டனர். பிறகு அதை அப்படியே, அரைகுறை சிமெண்ட் பில்லரோடு விட்டுவிட்டு, பிறகுதான் இங்கே அமைத்தார்கள்' என்றார்.

புதுக் கட்டிடத்திற்கு சில கி.மீ., தூரத்திலிருந்து கட்டுமானப் பணிகள் நடந்து, மண்சாலை புதிதாக போடப்பட்டு வருவதையும் காண முடிந்தது. மழைக் காலங்களில், இங்கே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து மூலைக்கு மூலை ஓடுமாம். அதுவெல்லாம் ஒன்று சேர்ந்து, அருகே ஓடும் நொய்யலாற்றில் கலக்குமாம். அந்த நீர் வழிப்பாதைதான் இப்போது மண்பாதை ஆகிவிட்டது. இனி அது தார்ச் சாலையாகவும் ஆகிவிடும் என்றனர் சிலர்.

'சாயங்காலம் 6 மணிக்கு யாரும் இங்கே வரமுடியாது. அந்த அளவுக்கு யானைக் கூட்டம் வந்துவிடும். 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, யானைகள் மலையை விட்டு இறங்கினதேயில்லை. எல்லாம் மலையிலேயே இருந்துவிடும். 10 வருஷமாகத்தான் இப்படி படையெடுக்கிறது. அதுக போற வழியெல்லாம், இதுமாதிரி கட்டிடங்கள் கட்டி, வேலி போட்டுட்டா அதுக என்னதான் செய்யும்?

இந்த புதுக் கட்டிடம் வந்ததால, இன்னும் யானைக அழிச்சாட்டியம் கூடத்தான் போகுது' என்று வேதனைப்பட்டார் நாத கவுண்டம்பாளையம் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர்.

'விதிமீறல் இல்லை!'

ஆலாந்துறை பேரூராட்சித் தலைவர் மணிகண்டனிடம் கேட்டபோது, 'அந்த நிலம் தனியாருக்குச் சொந்தமானது. அவர்கள், வெளியூரிலிருந்து வந்தால் தங்குவதற்கு 2,000 சதுர அடியில், ஒரு கெஸ்ட் ஹவுஸ்தான் கட்டியிருக்கிறார்கள். அது ரிசார்ட்டோ, ஓட்டலோ அல்ல. 4,000 சதுர அடி வரை, பஞ்சாயத்து அனுமதி கொடுக்கலாம். இதில், விதிமீறல் எதுவுமே இல்லை' என்றார்.

'சாத்தியமே இல்லை'

இது விதிமீறலா இல்லையா? என்பது பற்றி ஓய்வு பெற்ற, வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நீங்கள் சொல்லும் கிராமம், மலைப்பகுதி கிராமங்கள் பட்டியலில் வருவதுதான். இங்கே, ஒரு தோட்டத்தில் வீடு கட்டக்கூட மலைப்பகுதி மேம்பாட்டுக் குழுவிடம் அனுமதி வாங்க வேண்டும். கண்டிப்பாக இது அமைந்துள்ள இடத்தில், கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்க சாத்தியமேயில்லை' என்றார்.

எது எப்படியோ, ஆளுவோர் கண் சிமிட்டுவதாலோ, கண்டும் காணாமல் இருப்பதாலோ, இதுபோன்ற கட்டிடங்கள் ஒவ்வொரு மலை அடிவாரத்திலும் பல்கிப் பெருகி வருகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலை தப்புமா? அரசுக்கே வெளிச்சம்.

பங்களா செல்ல போடப்பட்டுள்ள மண் பாதை. படம்: கா.சு.வேலாயுதன்

வனத்தையொட்டி பிரம்மாண்டமாய் எழுப்பியிருக்கும் மாளிகை. படம்: கா.சு.வேலாயுதன்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x