

சென்னையில் காலியாக உள்ள இடங்களில் பூங்காக்களை அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள் ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சிப் பணிகள் குறித்து, அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில், ஆணையர் பி.சந்தரமோகன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அதில் பூங்காக்கள், சாலை மையத் தடுப்புகள், சாலையோர பூங்காக்கள், போக்குவரத்து தீவுத்திட்டுகள் மற்றும் திறந்தவெளி நிலங்களில் பூங்காக்கள் அமைத்து பராமரிக்கும் பணிக்கு தனியார் நிறுவனங்கள் முன்வந்தால் ஏற்றுக்கொள்வது எனவும், அதற்கு ஆகும் செலவை விளம்பரங்கள் செய்து, அதன் மூலம் அவர்கள் ஈடு செய்துகொள்ளலாம் என்றும், அதற்கான ஒருங்கிணைப்பு அலுவலரும் நியமிக்கப்படுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, மாநகராட்சி நிர்வாகம், அரசுத் துறைகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும், மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மற்றும் தூர் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது குறித்தும் அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் கே.எஸ்.கந்தசாமி (பணிகள்), ஆர்.கண்ணன் (சுகாதாரம்), மத்திய வட்டார துணை ஆணையர் சுபோத்குமார், தெற்கு வட்டார துணை ஆணையர் எ.அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.