

ஆவின் ஊழல் மற்றும் கலப்படம் குறித்த சந்தேகங்களை போக்கும் வகையில், தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு கடந்த முறை பால் விலை உயர்வை அறிவித்த போதே இந்த விலை உயர்வு தனியார் பால் நிறுவன முதலாளிகளுக்கு இலாபம் தரும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளதோ என்று ஐயப்பாடு ஏற்படுகிறது என்று தெரிவித்து இருந்தேன்.
இதனிடையே பொதுமக்கள் சிலரிடம் இருந்து எனக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பாலின் கொள்முதல் விலையை ஆவின் உயர்த்தியபோதும் தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தாமால் பால் உற்பத்தியாளரிடம் இருந்து ஒரு லிட்டர் 22 ரூபாய் என்று வாங்கி அதை ஒரு லிட்டருக்கு 26 ரூபாய் என்று ஆவின் நிறுவனத்திற்கு விற்பதன் மூலம் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் சாதரணமாக லாபம் சம்பாதித்து விடுவதாகவும், தனியாரிடம் இருந்து வாங்கும் பாலின் தரம் குறைந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் ஒருசில தனியார் நிறுவன பாலின் தரம் போதுமானதாக இல்லையென்று சுட்டிக்காட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றச்சாட்டு உண்மையோ என்று எண்ணும் விதத்தில் இதுவரை இல்லாதவகையில் மிக குறுகிய காலத்திலேயே ஆவின் பால் கொள்முதல் அளவு சுமார் 1,50,000 லிட்டர் கூடியுள்ளதாகவும், அது இன்னும் அதிகரிக்கும் என்றும் அறிக்கை வந்துள்ளது.
இதோடு ஆவின் நிறுவனத்தை பராமரிக்க ஒரு ஆணையரும் (Commisioner), ஆவின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள ஒரு நிர்வாக இயக்குனரும் (Managing Director) இருக்க வேண்டும். அதாவது ஆவின் நிர்வாகத்தை சரியாக நடத்தவேண்டியவர் நிர்வாக இயக்குனர் (M.D). நிர்வாகம் சரியில்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியவர் ஆணையாளர் (Commisioner). ஆனால் ஆவின் நிறுவனத்தில் இருவரும் ஒருவரே.
தற்போது ஆவின் நிர்வாக சீர்கேட்டை சரிபடுத்த முடியாமல் போனதற்கு காரணம், கருவாட்டை தின்கின்ற எலியே, அந்த எலியை பிடிக்கின்ற பூனையாகவும் இருக்கின்ற வினோதமான சூழ்நிலைதான்.
எனவே ஆவின் நிர்வாகம் குறித்தும் கொள்முதல் மற்றும் விற்பனையில் தனியார் லாபம் ஈட்டும் நோக்கம் குறித்தும், ஆவினில் நடைபெறும் ஊழல் மற்றும் கலப்படம் குறித்தும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்கும் வகையில் இந்த அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.