Published : 06 Jun 2017 12:22 pm

Updated : 07 Jun 2017 09:05 am

 

Published : 06 Jun 2017 12:22 PM
Last Updated : 07 Jun 2017 09:05 AM

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் காலமானார்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பி னர் இரா.செழியன் உடல் நலக்குறைவால் வேலூரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.செழியன் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் விரிவு ரையாளராக பணியாற்றி வந்தார். பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கியிருந்த அவருக்கு, விஐடி பல்கலைக்கழகம் எல்லா வசதி களையும் ஏற்படுத்தி தந்திருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இரா.செழியன் நேற்று காலை காலமானார். வேலூர் பாலாற் றங்கரையில் நேற்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


வாழ்க்கை வரலாறு

1923-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்ணபுரம் என்ற பகுதியில் வி.எஸ்.ராஜகோபால், மீனாட்சி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். 1939-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் தங்கப் பதக்கம் பெற் றார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1944-ம் ஆண்டு கணிதப் பாடத்தில் பிஎஸ்சி ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

அரசியல் பயணம்

இவரது மூத்த சகோதரர் நாவலர் நெடுஞ்செழியன். இருவரும் அண்ணாவால் ஈர்க்கப்பட்டனர். 1949-ம் ஆண்டு அண்ணாவால் திமுக தொடங்கப்பட்டபோது, அவ ருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு செழியனுக்கு கிடைத்தது. அண் ணாவின் நம்பிக்கைக்குரிய வராகவும் திகழ்ந்தார்.

1962-ம் ஆண்டு நடந்த நாடாளு மன்ற பொதுத் தேர்தலில் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் தொகுதியின் திமுக வேட்பாளராக அண்ணாவால் இரா.செழியன் அறிவிக்கப்பட்டார். தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் தனது சிறப் பான செயல்பாடுகளால் அனை வரையும் கவர்ந்தார். கேள்வி நேரத் தின்போதும், பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போதும் சிறப் பாக செயல்பட்டார்.

1967-ல் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டார். 1971-1973 வரை பொது கணக்குக் குழுவின் தலைவராக இரா.செழியன் இருந்தபோது, 96 அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து சாதனை படைத் துள்ளார். 1975-77 வரையிலான நெருக்கடி நிலை காலகட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து குரல் கொடுத்தார். 1977-ல் திமுகவில் இருந்து விலகி ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

1978-ல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், தமிழக முதல் வர் எம்ஜிஆரை தொடர்பு கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக இரா.செழியனை தேர்வு செய்து அனுப்புமாறு கோரிக்கை வைத் தார். இதை ஏற்று அதிமுக உறுப்பினர்களால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இரா.செழியன் அங்கும் தனித்துவத்துடன் பணியாற்றினார்.

வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் கட்சி தொடங்கப்பட்டபோது, முக்கிய பொறுப்பில் இரா.செழியன் இருந்தார். ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் லோக்தளம் கட்சி உருவானபோது அதன் துணைத் தலைவராக இருந்தார். 2001-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற அவர், புத்தகங்களை படிப்பதிலும் எழுதுவதிலும் அதிக ஆர்வம் காட்டினார். தமிழ், ஆங்கிலம் நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் அரசியல் தொடர்பான கட்டுரைகளை அடிக்கடி எழுதிவந்தார்.

நெருக்கடி கால அத்துமீறல்கள் குறித்து இரா.செழியன் எழுதிய ‘Shah Commission Report, Lost and Regained’ மற்றும் ‘Parliament for The People’ என்ற புத்தகம் அரசியல் கட்சியினர், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், இரா.செழியனைப் பற்றி குறிப்பிடும்போது, “இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழிகாட்டியாக உள்ளார்” என புகழ்ந்தார்.

50 ஆயிரம் புத்தகங்கள்

புத்தகங்களை படிப்பதில் அதிக ஆர்வமுடைய இரா.செழியன் 50 ஆயிரம் புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். விஐடி பல்கலைக் கழக வளாகத்தில் அவரது புத்தகங் களைப் பாதுகாக்க தனி நூலகம் செயல்பட்டது. அந்த புத்தகங்கள் அனைத்தையும் விஐடி பல்கலைக் கழகத்துக்கு தானமாக இரா.செழி யன் வழங்கியுள்ளார்.

இரா.செழியன் மறைவு குறித்து, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கூறும்போது, ‘‘இரா.செழியனும் நானும் 50 ஆண்டுகள் பழகிவந் தோம். 15 ஆண்டுகள் மக்களவை யிலும், 12 ஆண்டுகள் மாநிலங் களவையிலும் உறுப்பினராக இரா.செழியன் இருந்தார்.

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற விதிகள் குறித்த சந்தேகம் எழுந்தால் அவரை அணுகி தெரிந்துகொள்வார்கள்.

அண்ணாவுடன் நெருங்கி பழகியவர். சமீபத்தில் அவரது 95-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடந்தது. இதில், முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தினர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இரா.செழியனை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு ஒரு சமயம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அவர் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக இருந்தார். அரசியலில் தூய்மை, நேர்மையை கடைபிடித்து வாழ்ந்து காட்டினார்’’ என்று தெரிவித்தார்.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்இரா.செழியன் காலமானார்நாடாளுமன்றவாதி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x