Last Updated : 02 Mar, 2014 12:00 AM

 

Published : 02 Mar 2014 12:00 AM
Last Updated : 02 Mar 2014 12:00 AM

தமிழகத்தில் மலைகளை அழிக்க ஒரு சுரங்கத் தொழில்: போராட்டக் களத்தில் திருவண்ணாமலை பொதுமக்கள்

ஆன்மிகத் தலங்களில் மிகவும் பிரசித்திபெற்ற நகரான திருவண்ணாமலையை ஒட்டிய மலைகளில் ஜிண்டால் நிறுவனத்தினர் தொடங்க உள்ள இரும்பு கனிமங்களை உடைத்தெடுக்கும் சுரங்கத் தொழிலை தடுத்து நிறுத்த பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.

சித்தர்களும் துறவிகளும் வாழ்ந்த, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் நூற்றுக்கணக்கான துதிப் பாடல்களால் போற்றப்பட்ட அண்ணாமலையாரின் திருக் கோயிலின் இருப்பிடமும் ஆன இந்த மலைகளில் காடுகளை அழிப்பது, வெடி வைத்து கற்களை சிதைப்பது போன்ற செயல்பாடுகளைக் கொண்ட சுரங்கத் தொழிலை (mining) மேற் கொள்ள ஜிண்டால் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் நிலையில் இருப்பதால் திருவண்ணாமலை மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். இதை தொடக்க நிலையிலேயே முற்றிலும் தடுத்து நிறுத்தும் நோக்கில் பேரணி நடத்துவதுடன் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவும் திட்ட மிட்டுள்ளனர்.

காஞ்ச மலை, கவுதி மலை

2004-ம் ஆண்டில் தமிழக அரசின் அங்கமான டிட்கோ நிறுவனம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுதிமலை காப்புக் காடுகளிலும் (Reserved Forests), சேலம் மாவட்டத்தில் காஞ்சமலை காப்புக் காடுகளிலும் இரும்பு கனிமங்களை சுரண்டி எடுக்கும் பணிக்காக ஒரு டெண்டர் வெளி யிட்டது. இந்த டெண்டர் மூலம் சஜ்ஜன் ஜிண்டால் தொழில் குழு மத்தின் ஒரு அங்கமான `ஜிண்டால் விஜயநகர் ஸ்டீல் லிமிடெட்' என்ற நிறுவனம் தேர்ந் தெடுக்கப்பட்டது.இங்கிருந்து பெயர்த்தெடுக்கப்படும் இரும்பு கனிமங்கள் சேலம் அருகே உள்ள தனியார்-தமிழக அரசு கூட்டுத்துறை நிறுவனமான `சதர்ன் இண்டியா அயர்ன் அன்ட் ஸ்டீல்' நிறுவனம் நடத்திவரும் ஓர் எஃகு ஆலைக்கு வழங்கவே இந்த டெண்டர். (பின்னர், ஜிண்டால் நிர்வாகமே இந்த எஃகு ஆலையை வாங்கிவிட்டது.)

டெண்டரில் வெற்றிபெற்ற ஜிண் டால் நிறுவனம், சுரங்கத் தொழில் செய்வதற்கு மத்திய-மாநில அரசுகளிடமிருந்து தேவையான ஒப்புதல்களை (approvals) பெற முனைந்தது. இதில் எதிர்ப்புகள் வரவே, இந்த விஷயம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது.

இந்த விஷயத்தை ஆராய `மத்திய அதிகாரக் குழு' (central empowered committee) ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழு காஞ்ச மலை, கவுதி மலை காடுகளில் சுரங்கத் தொழில் செய்ய அனுமதி அளிக்கப்படக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது.அதற்கான பல காரணங்களையும் முன்னிலைப்படுத்தியது. இந்த அடர்ந்த மலை காடுகள் மழை காலங்களில் மழை நீரை உறிந்து, சேமித்துவைத்து ஆண்டு முழுவதும் வேளாண் தேவைகளுக்கு தேவை யான நிலத்தடி நீரை சீராக வழங்கிவருகிறது. இவற்றை சேதப் படுத்துவது விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

மேலும், சுரங்கத் தொழிலை மேற்கொள்ள வேண்டுமானால் கவுதி மலையில் இயற்கையாக வளர்ந்த 2,22,397 மரங்களும், காஞ்ச மலையில் 11,088 மரங்களும் வெட்டப்படவேண்டியிருக்கும்.

காற்று மண்டலம் மாசுபடும்

இவை தவிர வெட்டியெடுக்கப் படும் கற்களை சுத்திகரிப்பு செய்ய சேலம் மாவட்டத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஆலையால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் பிரச்சினை வேறு. மேலும், இந்த ஆலைக்கு தேவையான நீரை சாத்தனூர் அணையிலிருந்துதான் பெறவேண்டும். அதனால், குடிநீர், வேளாண் தேவைகளுக்கு பற்றாக் குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறெல்லாம் காரணங்களைக் காண்பித்து அந்த மத்திய குழு ஜிண்டால் நிறுவனத்துக்கு தொழில் அனுமதி மறுக்க பரிந்துரை செய்தது.

இருப்பினும் ஜிண்டால் நிறுவனம் விடவில்லை.மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. அதன் விளைவாகத்தான் உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்பட்ட பி.வி.ஜெயகிருஷ்ணன் தலைமையிலான ஒரு குழு சில நாட்களுக்கு முன்பு கவுதிமலை வட்டாரத்தைப் பார்வையிட்டது.

இதைப்பற்றி திருவண்ணா மலைவாழ் வழக்கறிஞரும் போராட்டக் குழு நிர்வாகிகளில் ஒருவருமான எஸ். சங்கர் என்பவர் `தி இந்து'விடம் பேசுகையில், “இங்கு ஜிண்டால் சுரங்கத் தொழில் நடத்த விரும்பும் பகுதி, கிரிவலம் வரும் பாதையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் மட்டுமே உள்ளது. நில அதிர்வு, நன்னீர் நுகர்வு, காற்று மண்டல மாசு போன்ற பல தொல்லைகளை உண்டுபடுத்தும் தொழில்களை எக் காலத்திலும் நாங்கள் நடத்தவிட மாட்டோம்.

உச்ச நீதிமன்றமே (வேறு ஒரு சந்தர்ப்பத்தில்) `அண்ணா மலையார் கிரிவலம் மேம்பாட்டு ஆணையம்' என்ற ஒரு அமைப்பை நிறுவச் செய்தது. இங்கு எந்த பணி நடக்க வேண்டும் என்றாலும் இந்த ஆணையத்தின் ஒப்புதல் வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆணையத்தின் தலைவர் நீதிபதி வெங்கடசாமி காலமாகிவிட்டார். இன்னும் மாற்றுத் தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால், ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலேயே தொழில் தொடங்க ஜிண்டால் நிறுவனம் முனைகிறது.மேலும் இம்மலையைச் சுற்றி 25 கி.மீ. சுற்றளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் வேளாண் தொழில் முற்றிலும் அழிந்துபோதும். மேலும் இம்மலையைச் சுற்றியுள்ள 51 கிராம மக்களுக்கு பலவித நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கர்நாடக மாநிலத்தில் சுரங்கத் தொழில் நடந்த பகுதியில் வசித்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களே இதற்கு சான்று.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், விரைவில் பொது மக்களைத் திரட்டி ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தவுள்ளோம். ஆணையத்தின் தலைவரை விரைவில் நியமிக்கக் கோரியும் மனு அளிக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இனி தீர்ப்பு அளிக்க வேண்டி யது உச்ச நீதிமன்றம்தான். தராசின் ஒரு தட்டில் பொருளாதார நன்மை. சேலம் எஃகு ஆலைக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து இரும்பு கனிமங்கள் கொண்டுவரப் படுகின்றன. திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் கிடைப் பதோ மட்ட ரக கனிமங்கள் (low grade ore). ஆனால், இவை அரு காமையில் கிடைப்பவை. இதனால் மூலப்பொருள் செலவு குறைவு என்பதே இந்த பொருளாதார நன்மை. சுற்றுசூழல் மாசு, காடு அழிப்பு, நீர் நெருக்கடி, புனித இடத்தில் அமைதி குலைவு ஆகியவை தராசின் மற்றொரு தட்டில். முள் எங்கு நிற்கிறது என்பதை நிர்ணயிக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் பணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x