Published : 16 Nov 2014 10:32 AM
Last Updated : 16 Nov 2014 10:32 AM

பானை ஓடு, வளையல், ரோம் காசுகள்: 3000 ஆண்டு பழமையான பொருட்கள் கோவை மாவட்டத்தில் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் செங்கதுறை அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டு பழமையான புதிய கற்கால கருவிகள், தமிழ் பிராமி எழுத்துக் குறியீடுகள் உள்ளிட்ட கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருப்பூரை சேர்ந்த வீரராஜேந் திரன் தொல்லியல், வரலாற்று ஆய்வு மையம் தொல்லியல் தொடர் பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் சார்பில் சு.வேலுச் சாமி, ஆசிரியர் வே.நாகராசு கணேஷ் குமார், க.பொன்னுச்சாமி, சு.சதாசிவம், பொறியாளர் சு.ரவிக்குமார் அடங்கிய குழுவினர் சமீபத்தில் கோவை மாவட்டம் சூலூர், செங்கதுறை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சுமார் 3 ஆயிரம் ஆண்டு பழமையான புதிய கற்காலக் கருவிகள், 2600 ஆண்டு பழமையான தமிழ் பிராமி எழுத்துக் குறியீடுகள் கூடிய கருப்பு, சிவப்பு நிறத்தாலான உடைந்த பானை ஓடுகள், சங்கு வளையல்கள், கல்மணிகள், பொருட்களை அரைக்க உதவும் கற்கள், எடைக் கற்கள், விளையாட்டு சில்லுகள், ரோம் நாட்டு நாணயங்கள் என பல பொருட்கள் கிடைத்தன.

இதுகுறித்து ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் சு.சதாசிவம் தெரிவித்ததாவது:

சுமார் கி.மு.7000 முதல் கி.மு.3000 வரையிலான காலகட்டம் ‘புதிய கற்காலம்’ எனப்படுகிறது. அப்போது, மனித வாழ்க்கை முறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இதை வரலாற்று ஆசிரியர்கள் ‘புதிய கற்காலப் புரட்சி’ என்கின்றனர். புதிய கற் கால மக்கள் தமக்கென குடி யிருப்புப் பகுதிகளை ஏற்படுத்திக் கொண்டு நிலையாக ஓரிடத்தில் வாழத் தொடங்கினர். இவர்கள் தான் முதன்முதலில் விவசாயம் செய்ய ஆரம்பித்தனர் எனலாம். விவசாயத்தில் நல்ல விளைச் சல் பெற வளமைக்கான வழிபாட்டை யும் செய்தனர். வேட்டையில் நிறைய விலங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கற்களால் செய்யப்பட்ட கருவிகளை நிலத் தில் நட்டு வழிபட்டுள்ளனர்.

சூலூர் பகுதியில் ரோம் நாட்டு காசுகள், பழங்காலச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப் பகுதி பெரும் வணிகத் தலமாக இருந்திருக்க வேண்டும். சூலூர் ராணுவ விமான நிலையத்தில் இருந்து 4 கி.மீ. வடக்கே செங்க துறை கிராமம், நொய்யல் ஆற்றங் கரையில் உள்ளது. இங்கு புதிய கற்கால தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், எடைக் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இங்கு சங்கு வளையல்களின் உடைந்த பகுதிகள், கல்மணிகள், பொருட்களைப் பொடி செய்யப் பயன்படுத்தப்பட்ட உருண்டைக் கற்கள், எடைக் கற்கள், விளை யாட்டு சில்லுகள் கிடைத்துள்ளன. இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டவை. இந்த பகுதி ஒரு தொழில் நகரமாக இருந்திருக்க வேண்டும். மக்கள் குடியிருப்புகளும் அதிகம் இருந்திருக்கும். இதை விவசாயம் மற்றும் தொழில் சார்ந்த நொய்யல் நதிக்கரை நாகரிகத்தின் ஒரு எச்சமாகவே பார்க்க முடிகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x