Published : 04 Jan 2014 06:16 PM
Last Updated : 04 Jan 2014 06:16 PM

மத்தியில் மாற்றம் ஏற்படுவது நிச்சயம்: ஜெயலலிதா

மத்தியில் மாற்றம் ஏற்படுவது நிச்சயம், அந்த மாற்றத்திற்குப் பிறகு தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் செய்ய வேண்டிய பணிகள் கடமைகள் நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில், பொங்கலுக்காக இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைத்துப் பேசிய முதல்வர்: தமிழகத்தின் நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் 281 கோடி ரூபாய் செலவில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கப்படுவதற்குக் காரணம், பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே என்றார்.

மேலும் அவர் கூறுகையில்: "தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் இன்னும் நிறைய செய்ய வேண்டிய பணிகள் கடமைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால் இந்திய அளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மக்கள் உறுதுணையோடு அத்தகைய மாற்றம் ஏற்படும்" என்றார்.

பகல் கனவு பலிக்காது:

தொடர்ந்து பேசிய முதல்வர், அரசின் மீது அவதூறுகளைப் பரப்பி, பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, மக்களை தங்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்று சிலர் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்று நினைத்தே அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அமைந்துள்ளன. அதனால் மக்களும் எனது அரசிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். எனவே அவர்களது பகல் கனவு பலிக்காது என்றார்.

பொதுநலம் போற்றப்படும்:

பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங்குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப்படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது.

தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப்படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப்படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். தமிழக மக்களின் நலன் தான் மேலானது என அரசு போற்றி பாதுக்காகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x