ஜி சாட்- 19 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்கு வாசன் வாழ்த்து

ஜி சாட்- 19 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்கு வாசன் வாழ்த்து
Updated on
1 min read

ஜி சாட்- 19 செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்கு தமாகா தலைவர் வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''இந்திய தொழில்நுட்பத்தில் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 டி1 ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிலிருந்து கடந்த 5-ம் தேதி அன்று விண்ணிற்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

குறிப்பாக இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களிலே அதிக எடை கொண்ட ஜி.சாட் 19 செயற்கைக்கோள், GSLV மார்க் III D1 ராக்கெட் மூலம் தற்போது இஸ்ரோவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா வெளிநாடுகளில் இருந்து தகவல் தொழில்நுட்பத்திற்கான செயற்கைக்கோளை செலுத்தும் முறை மாறி முதல் முறையாக நம் நாட்டில் இருந்தே விண்ணில் செலுத்தப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டிருப்பது தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா உலக நாடுகளுக்கு நிகராக வளர்ந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இது இந்திய விஞ்ஞானிகளின் தொடர் வெற்றிக்கு கிடைத்த மேலும் ஒரு மைல்கல்.

அறிவியல் உலகில் இந்திய விஞ்ஞானிகள் ஆற்றும் பணியினால் கிடைக்கின்ற வெற்றிகள் உலக அளவில் இந்தியாவிற்கு மென்மேலும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றது. இதற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது இந்திய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பும், தொடர் முயற்சியும், கடின உழைப்பும் என்றால் அது மிகையாகாது.

இந்த அரிய சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகளுக்கும் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்ட அனைத்துத் துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் தமாகா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in