Published : 23 Mar 2014 08:11 PM
Last Updated : 23 Mar 2014 08:11 PM

கரசேவை குற்றச்சாட்டு: கருணாநிதி மீது ஜெயலலிதா தாக்கு

கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது பாஜகதான். அந்த பாஜகவுடன் கூட்டணி அமைத் திருந்த கருணாநிதிக்கு அதிமுக மீது குறைகூற அருகதையில்லை என அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கடலூர் அதிமுக வேட்பாளர் எ.அருண்மொழித்தேவனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத் தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

சிறுபான்மையினரின் வாக்கு களைப் பெறவேண்டும் என்ற நோக்கில், அதிமுக கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது என்ற குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் சுமத்துகிறார் கருணாநிதி. கரசேவையை ஆதரித்ததும், ஆட்களை அனுப்பியதும் பாஜக தான்.

அந்த பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தார் கருணாநிதி. 1999 முதல் 2003-ம் ஆண்டுவரை பாஜக தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்து, வளமான இலாக்காக்களை திமுகதானே பெற்றுக்கொண்டது. அந்த அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக முரசொலி மாறன் பல மாதங்கள் இருந்தார். கருணாநிதி கரசேவைக்கு எதிரா னவர் என்றால் ஏன் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.

எனவே இதைப்பற்றி பேச கருணாநிதிக்கு என்ன அருகதை இருக்கிறது?

அரசியல் வாழ்க்கை

1982-ம் ஆண்டு அஇஅதிமுகவில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அப்போது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தலைமையில் கடலூரில் கடந்த 1982-ம் ஆண்டு நடந்த கட்சி மாநாட்டின் மூலம்தான் அரசியலுக்கு வந்தேன். அத்தகைய கடலூரில் 32 ஆண்டுகளுக்குப் பின் உங்களை சந்திப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சியில் விருத்தா சலத்தில் உள்ள பீங்கான் தொழில்நுட்ப பயிற்சி மையம் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் நவீனப் படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ரூ.8 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் 4 பாலப்பணிகளுக்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதில் ஒரு பாலம் முடிவடைந்துள்ளது. இம்மாவட்ட மக்கள் பாதுகாக்கப் பட்ட குடிநீரை பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்டு,கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ரூ.260 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

என்எல்சி 5 சதவீத பங்கு

நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் இம்மாவட்டத்தில் உள்ள நல்லூர் மற்றும் மங்களூர் ஒன்றியங் களுக்குட்பட்ட 101 ஏரிகள் ரூ.39 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக என்எல் சியின் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க முயற்சித்தபோது, அதை நான் பெரும் முயற்சி மேற்கொண்டு தடுத்து, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களே வாங்கச் செய்ததை இங்கே நினைவு கூர விரும்புகிறேன் என்றார் ஜெயலலிதா.

விழுப்புரம் கூட்டத்தில்...

விழுப்புரம் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியபோது, விழுப் புரம் மாவட்டத்தில் ஒலக்கூர்-திண்டிவனம் அருகே சாலை மேம்பால பணிக்காக 20.96 கோடியும், வெள்ளிமேடு பேட்டை-மைலம் சாலையில் மேம்பால பணிக்கு 23.42 கோடியும். விக்கிரவாண்டி-நேமூர் சாலையில் சாலை மேம்பாட்டு பணிக்கு 20.20 கோடியும், கெடிலம் ஆற்றில் மாற்றுபாதை பணிக்கு 10.36 கோடியும், திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்ட நீதிமன்ற வளாகத்துக்கு 17.31 கோடியும், மாவட்டத்தில் கறிக் கோழி வளர்க்கும் பண்ணைகளுக்கு 25 % மானியத்தில் 370 பண்ணைகளுக்கு 4.93 கோடி ரூபாயும் ஒதுக்கி இதில் 292 பண்ணைகள் செயல்பட தொடங்கியுள்ளன என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சித்தாமூர் ஆறுமுகம் தேமுதிகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இவர் 1991 தேர்தலில் இளையபெரு மாளின் மனித உரிமை கட்சியின் சார்பாக எம் எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர். அதன்பிறகு பல்வேறு கட்சிகளுக்கு மாறியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x