

திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன் ஆகியவற்றுக்கு, புவிசார் குறியீடு பெறுவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் மார்ச் 1-ம் தேதி நடைபெறுகிறது.
தென்தமிழக மக்களின் கலாச்சாரம் மற்றும் உணவுப் பழக்கம் எப்போதும் தனித்துவம் வாய்ந்தது. பழங்காலம் முதலே தென் மாவட்ட தாய்க்குலங்களின் கைப்பக்குவத்தில் உருவான, அதிரசம், தட்டை, முந்திரிக் கொத்து, சீடை, சுசியம், அப்பம்... போன்ற உணவுப் பண்டங்கள் வரிசையில், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன் ஆகியவை உலகப் புகழ் பெற்றுள்ளன.அவற்றுக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சி தொடங்கி உள்ளது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் சே.பிரதாபன் கூறியதாவது:
தென்தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இரு உணவுப் பண்டங்கள், திருநெல்வேலி அல்வா மற்றும் தூத்துக்குடி மக்ரூன்.
இவற்றின் பழமை, சுவை, தனித்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த உணவுப் பண்டங்களுக்கு, மத்திய அரசால் வழங்கப்படும் அங்கீகாரமான புவிசார் குறியீடு பெறும் வழிமுறைகள் குறித்து ஆராயப்படுகிறது. இதற்கான கலந்தாய்வுக் கூட்டம், திருநெல்வேலி ஸ்ரீபுரம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மார்சி 1-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய அறிவுசார் சொத்துரிமைக் கழக புவிசார் குறியீட்டுக்கான உதவி பதிவாளர் சின்னராஜாநாயுடு பங்கேற்று பேசுகிறார். திருநெல்வேலி அல்வா மற்றும் தூத்துக்குடி மக்ரூன் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கலாம்.
கூட்டத்தில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். கலந்து கொள்ள விரும்பும் உற்பத்தியாளர்கள் தங்கள் பெயரை 94440 42046 அல்லது 94862 58393 ஆகிய அலைபேசி எண்களில் பதிவு செய்து கொள்ளலாம்.