Last Updated : 07 Mar, 2014 12:00 AM

 

Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM

சென்னை: அடிப்படை வசதிகள் இல்லாத வில்லிவாக்கம் பேருந்து நிலையம்- பொதுமக்கள் அவதி

தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்துசெல்லும் வில்லி வாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர், இருக்கை போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதி வில்லிவாக்கம். இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பாரிமுனை, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், வள்ளலார் நகர், அண்ணா சதுக்கம், வண்டலூர், பூந்தமல்லி, திருவேற்காடு, வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள், சிறிய பேருந்துகள் என 77 பேருந்துகள் சென்று வருகின்றன. வில்லிவாக்கம் பேருந்து நிலையம் 15 ஆயிரம் சதுரஅடி பரப்புள்ளது.

பரபரப்பான பேருந்து நிலையம்

வில்லிவாக்கம் மட்டுமின்றி, அதை ஒட்டியுள்ள கொளத்தூர், ராஜமங்கலம், ஜி.கே.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் வந்து இங்கிருந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணியிடங்களுக்கு பேருந்தில் செல்கின்றனர். இதுமட்டு மல்லாமல் அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர் களும், தங்கள் இருப்பிடங்களில் இருந்து ரயிலில் பயணித்து, பிறகு, வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, தங்கள் பணியிடங்களுக்கு பேருந்துகளில் செல்கின்றனர்.

திரியும் மாடுகள் கூட்டம்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் தாகம் தணிக்க குடிநீர் வசதியும், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் அமர இருக்கை வசதிகளும் கடந்த பல ஆண்டுகளாகவே இல்லை. பேருந்து நிலையத்துக்குள் மாடுகளும் அடிக்கடி கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

இதுகுறித்து வில்லிவாக் கத்தைச் சேர்ந்த ஈசன் என்பவர் கூறியதாவது:

ஊராட்சி, பேரூராட்சியாக இருந்த காலத்தில் இருந்தே, அதாவது, 35 ஆண்டுகளுக்கு மேலாக வில்லிவாக்கம் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.

ஆரம்பத்தில் கட்டாந்தரையாக இருந்த பேருந்து நிலையம் படிப்படியாக வளர்ச்சியடைந்து, இன்று மேற்கூரை, பிளாட்பாரம், சிமென்ட் தரை, சுற்றுச்சுவரோடு இருக்கிறது.

ஆனால், குடிநீர், இருக்கை வசதிகள் கடந்த பல ஆண்டு களாகவே இல்லை. இதனால் முதியவர்கள், பெண்கள், குழந் தைகள் பெரிதும் அவதிப்படு கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும் பலனில்லை. இவ்வாறு ஈசன் கூறினார்.

கழிவறை விரைவில் திறப்பு

ராஜமங்கலத்தைச் சேர்ந்த பிரசாத் கூறியதாவது: வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் பயன்படுத்துகின்றனர்.

பேருந்து நிலையத்தை ஒட்டி தற்போது அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி இலவச கழிவறை விரைவில் திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், குடிநீர், இருக்கை வசதி எப்போது கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பேருந்து நிலையத்தின் பின்புறப் பகுதியை ஒட்டி மாடுகள் பராமரிக்கப்படுவதால், அவ்வப் போது பேருந்து நிலையத்தில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதையும் சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘‘இதுகுறித்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் குடிநீர், இருக்கை வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்து நிலையத்தில் மாடுகள் திரிவதைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x