Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

வங்கி ஸ்டிரைக்: ரூ.14 லட்சம் கோடி காசோலைகள் முடக்கம்; ஏ.டி.எம்.கள் காலியானதால் மக்கள் அவதி

நாடுமுழுவதும் வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் ரூ.14 லட்சம் கோடி காசோலைகள் பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கின. ஏடிஎம்களில் பணம் காலியானதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

சம்பள உயர்வு வழங்குவது, வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது.

1 லட்சம் ஊழியர் பங்கேற்பு

நாடு முழுவதும் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 26 பொதுத்துறை வங்கிகள், 12 தனியார் வங்கிகள், 6 வெளிநாட்டு வங்கிகள், 42 கிராமிய வங்கிகள் மற்றும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகளில் பணியாற்றும் 8,50,000 ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

2 நாள் வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளில் பணப் பரிவர்த்தனை முழுவதுமாக முடங்கியது. வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம் செலுத்த முடியாமலும் பணம் எடுக்க முடியாமலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வியாபாரிகள் கடும் பாதிப்பு

2-வது நாளில் நிலைமை மேலும் மோசமானது. அவசர தேவைக்கு ஏடிஎம்களில் பணம் எடுக்கச் சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வங்கி ஊழியர் வேலைநிறுத்தத்தால் வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலை சிண்டிகேட் வங்கி அருகே கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் பொருளாளர் ஜி.முரளி, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் உள்பட 9 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்தகட்ட போராட்டம்

போராட்டம் குறித்து வெங்கடாச்சலம் கூறுகையில், ‘‘நாடுமுழுவதும் நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் ரூ.14 லட்சம் கோடி மதிப்புள்ள 15 கோடி காசோலைகள் பரிவர்த்தனை செய்யப்படாமல் முடங்கின. தமிழகத்தில் சுமார் ரூ.1.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள 1.50 கோடி காசோலைகள் பரிவர்த்தனை முற்றிலுமாக முடங்கியது. பணம் இல்லாததால் நாடு முழுவதும் 30 ஆயிரம் ஏடிஎம்கள், தமிழகத்தில் 7,500 ஏடிஎம்கள் செயல்படவில்லை.

அடுத்தகட்டமாக தீவிர வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது பற்றி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x