

சென்னைக் குடிநீர் வாரியம் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியம் சார்பில், குடிநீர்வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையன்று காலை 10 மணிமுதல், பிற்பகல் 1 மணிவரை கூட்டம் நடத்தப்படுகிறது.
மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடத்தப்படும் இந்த திறந்த வெளிக் கூட்டம், குடிநீர், கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள் சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் தொடர்பாக, பொதுமக்கள் மனு அளித்து, அதனை தீர்த்துக் கொள்வதற்காக நடத்தப்படுகிறது.
அந்த வகையில், இம்மாதத்துக்கான கூட்டம், சனியன்று, சென்னையில் திருவொற்றியூர், ராயபுரம், தேனாம்பேட்டை, பெருங்குடி, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சென்னைக் குடிநீர் வாரியத்தின் 15 பகுதி அலுவலகங்களிலும் நடந்தன.
அந்த வகையில், பெரம்பூர்- வடிவேல் 2-வது குறுக்குத் தெருவிலுள்ள சென்னைக் குடிநீர் வாரியத்தின் திரு.வி.க.நகர் பகுதி அலுவலகத்தில் நடந்த திறந்த வெளிக் கூட்டத்தில் நான்கு பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில், கம்பர் நகர் பகுதியைச் சேர்ந்த சீதாபதி, வெங்கடேசன் உள்ளிட்ட மூன்று பேர், குடிநீர், குடிநீர் குழாய், கழிவுநீர் அடைப்பு தொடர்பாக புகார் மனு அளித்தனர். அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால், இந்த கூட்டத்துக்கு வந்த, 80 வயது மதிக்கத்தக்க மூத்த குடிமகனான எம்.கிருஷ்ணமூர்த்தி மட்டும் புகாருக்கு பதில், சென்னைக் குடிநீர் வாரியத்துக்கு நன்றி க் கடிதம் அளித்து, அதிகாரிகளை நெகிழ வைத்தார்.
கிருஷ்ணமூர்த்தி வசிக்கும் ஜமாலியா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆபிசர்ஸ் காலனி பகுதியில், கடந்த ஆண்டு மே மாதம், குடிநீர் வாரியம், கழிவுநீர் குழாய்களை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, கிருஷ்ணமூர்த்தி வீட்டின் குடிநீர் குழாய் இணைப்பு தவறுதலாக துண்டிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, கடந்த மாதம் நடந்த திறந்தவெளி கூட்டத்தில், கிருஷ்ணமூர்த்தி அளித்த மனு மீது, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையினால், தற்போது கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு குடிநீர் வருவதில் சிக்கல் இல்லை.
எனவே, தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுத்த குடிநீர் வாரியத்துக்கு நன்றி சொல்லி, அதிகாரிகளிடம் கடிதம் அளித்தார். இதனால், புகார்களை மட்டுமே பார்த்து பழகிய சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.