

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலும், புதுச்சேரியில் காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அந்த அரசுடன் கலந்தாலோசனை நடத்தாமலேயே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் நீர்கரிம வாயுக்கள் எடுக்க மக்களுடைய ஒப்புதல் இல்லாமலே மத்திய அரசு ஜெம் லெபாரட்டரீஸ் என்னும் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிறுவனம் மல்லிகார்ஜூனப்பா சித்தேஸ்வரா எனும் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான நிறுவனம் ஆகும்.
ஹைட்ரோ கார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதும், உட்கொள்ளுவதும் மிகவும் ஆபத்தானது. இவை புற்றுநோயை உருவாக்கும். மேலும் சிறுநீரகங்கள், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் ஆபத்தான இந்த திட்டத்திற்கு மத்திய அனுமதி அரசு பாதிக்கப்படும் மக்களிடம் கருத்து கேட்காமல் அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக மக்களால் மீத்தேன் திட்டம் விரட்டியடிக்கப்பட்டது. தற்போது ஹைட்ரோ கார்பன் ஆய்வு திட்டம் என்ற பெயரில் சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் கேடு விளைவிக்கும் நாசகரமான திட்டத்தை தனியார் நிறுவனங்களின் மூலம் மத்திய பாஜக அரசு மீண்டும் தமிழகத்தில் புகுத்த நினைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் இந்த திட்டத்தால் ஏற்கெனவே வறட்சியாலும், சரியான நீர் ஆதாரம் இல்லாமலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் விவசாயம் முற்றிலுமாக அழியும் சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக மோடி அரசு அனுமதி அளித்துள்ள இத்திட்டத்திற்கு எதிராக தமிழக மக்கள் கட்சி வேறுபாடின்றி ஜல்லிக்கட்டு போராட்டம் போல் போராட முன்வர வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.