

சென்னை தியாகராய நகரில் விதி மீறல் கட்டிடங்கள் மீது இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 அடுக்குமாடி வணிக வளாக கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக கட்டிடம் முழுமையாக சேதமடைந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லையென்றாலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின.
விதிமீறல் கட்டிடங்கள்
சென்னையின் முக்கிய வணிகப் பகுதியாக தியாகராய நகர் பகுதி திகழ்ந்து வருகிறது. தெற்கு மற்றும் வடக்கு உஸ்மான் சாலையை ஒட்டி தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் அனைத்து வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன. தமிழகம் முழுவதும் இருந்தும் பொருட்களை வாங்க தி.நகருக்கு ஏராளமானோர் வருகின்றனர். இத னால் இந்தப் பகுதி எப்போதும் நெரிசல் மிகுந்ததாக உள்ளது.
கூட்டம் கூட்டமாக வரும் வாடிக்கையாளர்களை கவர பல கடைகள் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளன. இருக்கும் குறுகிய இடத்தில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் அமைந்துள்ளன. திறந்தவெளி நிலம் ஒதுக்காதது, தளபரப்பு குறியீடு மீறல் என பல விதிமீறல்கள் இந்தப் பகுதியில் உள்ளன.
25 கட்டிடங்களுக்கு சீல்
தி.நகரில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழுத்தம் ஏற்பட்டதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 பெரிய வணிக நிறுவன கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இவற்றில் 6 கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ-வும் 19 கட்டிடங்களுக்கு மாநகராட்சியும் சீல் வைத்தது. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டிடங் களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.
தீ விபத்தில் சிக்கிய கட்டிடம்
அவ்வாறு சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் கட்டிடமும் ஒன்று என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறியது:
தீ விபத்தில் சிக்கிய கட்டிடத் துக்கு சிஎம்டிஏ அனுமதி அளித்திருந் தது. 4 மாடிகள் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் மேற்கொண்டு 3 மாடிகளை கட்டிவிட்டனர். இது குறித்து புகார்கள் வந்ததையடுத்து, கட்டிடத்துக்கு சீல் வைத்தோம். ஆனால் பல கடைகளின் உரிமை யாளர்கள் ஒன்றாக சேர்ந்து நீதிமன்றம் சென்றதால், அனை வருக்கும் பொதுவான தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்த உத்தரவின்படி சீல் அகற்றப்பட்டது.
113சி பிரிவு
சென்னையில் விதிமீறல் கட்டிடங் கள் குறித்து நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு விதிமீறல் கட்டிடங்களை வரைமுறைப்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது. அதன் பேரில் தமிழ்நாடு நகரமைப்பு சட்டத்தில் 113சி பிரிவை சேர்த்து, 2007 ஜூலை மாதத்துக்கு முன் னர் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங் களுக்கு சில விதிவிலக்குகளை அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்த 113சி பிரிவு இன்னும் அமலுக்கு வரவில்லை. இதனை கருத்தில் கொண்டு, 113சி பிரிவு அமலுக்கு கொண்டுவரப்படும் வரை தி.நகர் கட்டிடங்கள் செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தியுள்ளோம். 113சி பிரிவு அமலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும். தி.நகரில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் 113சி விதிவிலக்கு அளிக்கக்கூட தகுதியற்றவையே.
தொடர் ஆய்வு
விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தாலும், தி.நகர் பகுதியில் உள்ள கட்டிடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து விதிமீறிய கட்டிடங்களை கணக் கெடுத்து வருகிறோம். 113சி பிரிவு நடைமுறைக்கு வந்தவுடன் முழுவீச்சில் நடவடிக்கைகள் தொடங்கப்படும். அடுத்த 2 மாதங் களுக்குள் 113சி பிரிவு நடை முறைக்கு வந்துவிடும் என காத் திருக்கிறோம். இவ்வாறு சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதனைத் தீர்க்கும் வகையில் 113சி பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தை எச்சரிக்கையாக கருதி, உயிரிழப்புகளை தவிர்க்கும் வகை யில் விதிமீறல் கட்டிடங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.