

சென்னையில் ஆர்.கே.நகர் உட்பட 3 இடங்களில் தொடங்கப்பட உள்ள ‘அம்மா வாரச் சந்தை’, வரவேற்பை பொறுத்து, மேலும் 4 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மாநக ராட்சி தெரிவித்துள்ளது. சந்தையில் விற்கப்படும் பொருட்கள் தொடர்பான முக்கிய விவரங்களை வியாபாரிகள் தெரிந்துகொள்ள மாநகராட்சி சார்பில் பிரத் யேக இணையதளம் தொடங் கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
பல்வேறு வகையான பொருட் களை மக்கள் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் சென்னையில் மாநகராட்சி சார்பில் ‘அம்மா வாரச் சந்தை’ அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் ரிப்பன் மாளிகை யில் சமீபத்தில் நடந்தது. இதில், மாநகராட்சி ஆணையர் தா.கார்த்தி கேயன், 32 மாவட்ட ஆட்சியர்கள், 45 பொதுத்துறை வங்கிகள், அரசின் 25 சேவைத்துறைகள், 27 ஏற்றுமதி நிறுவனங்களை சேர்ந்த உயர்நிலை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி வடக்கு வட்டாரத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் பகுதி, மத்திய சென்னை வட்டாரத்தில் அசோக் நகர் 11-வது அவென்யூ, தெற்கு வட்டாரத்தில் ஓஎம்ஆரில் பேஷன் டெக்னாலஜி கல்லூரி - டைடல் பார்க் இடையே பறக்கும் ரயில் பாதைக்கு கீழ் உள்ள பகுதி ஆகிய 3 இடங்களில் அம்மா வாரச் சந்தை அமைக்கப்பட உள்ளது. இது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். சந்தைக்கு தேவையான இடம், கூடாரம், மின்சாரம், அலமாரி, குடிநீர், கழிவறை, வாகன நிறுத்துமிடம், மருத்துவ வசதி, 108 ஆம்புலன்ஸ் போன்றவற்றை சென்னை மாநகராட்சி இலவசமாக வழங்கும்.
மக்களின் வரவேற்பை பொறுத்து அரும்பாக்கம் (பசுமை தீர்ப்பாயம் அருகே), தங்கசாலை (மேம் பாலத்தின் கீழே), வளசரவாக்கம் (ஆவின் பாலகம் அருகே), சேத்துப்பட்டு (பழைய தார்க் கலவை வளாகம்), மெரினா கடற்கரை ஆகியவற்றில் ஏதே னும் 4 இடங்களில் இது விரிவு படுத்தப்படும்.
தனி இணையதளம்
விவசாயிகள், உற்பத்தியாளர் கள் தங்கள் பொருட்களை சந்தைக்கு கொண்டுவரும்போது தமிழக அரசு துறைகளின் ஒருங் கிணைப்பு அலுவலர் அடையாள அட்டை வழங்க வேண்டும். என்னென்ன பொருட்கள், அது சம்பந்தப்பட்ட துறை, அதற்கு அடையாள அட்டை வழங்கும் ஒருங்கிணைப்பு அலுவலர் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் விவரங் கள் அடங்கிய இணையதளம் சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கப்படும்.
சிறப்பு பொருளுக்கு முன்னுரிமை
மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப் படும் சிறப்பு பொருட்களை கொண்டுவர முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 100 சதுர அடி வீதம் கடை அமைத்துத் தரப்படும். அம்மா வாரச் சந்தை தொடர்பாக மக்களும், மற்ற அலுவலகங்களும் தொடர்புகொள்ள தனியாக ஒரு தொலைபேசி எண், மின்னஞ்சல் மற்றும் ஒரு அலுவலரை நியமித்து அதன் விவரங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
வாட் வரி கட்டாயம்
நிறுவனங்கள், தொழிற்சாலை கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வாட் வரி செலுத்தியிருந்தால் மட்டுமே அம்மா வாரச் சந்தையில் அனு மதிக்கப்படும். சந்தையில் பொருட் களின் விலையை தயாரிப்பாளர், உற்பத்தியாளர் நேரடியாக தீர் மானிக்கவும், இடைத் தரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். சைவ, அசைவப் பொருட்களை விற்க தனித்தனி இடங்கள் ஒதுக்கப்படும். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் மூலம் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.