Published : 29 Mar 2014 12:00 AM
Last Updated : 29 Mar 2014 12:00 AM

தாலாட்டு ஒரு பக்கம்; உள்குத்து மறுபக்கம்- இடியாப்ப சிக்கலில் வசந்தகுமார்

‘கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல்களால் திண்டாடுவார்’ என, ‘தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. அதை நிரூபித்திருக்கிறார்கள் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்.

வேட்பாளர் ஆன பின் முதன் முதலில் கன்னியாகுமரி மாவட்டம் வந்த வசந்தகுமாருக்கு களியக்காவிளையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

முன்னதாக, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த வசந்தகுமார் அங்கிருந்து கார் மூலம், சரியாக காலை 10.30 மணிக்கு களியக்காவிளை வந்து சேர்ந்தார்.

களியக்காவிளை சாலை முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் குவிந்திருந்ததால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த குழித்துறை தீயணைப்பு நிலைய வாகனம், தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆகியவை போக்குவரத்து நெருக்கடியில் சிக்கின.

சேவை தொடரும்

வரவேற்புக் கூட்டத்தில் வசந்தகுமார் பேசுகையில், ‘பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் நான் போட்டியிடவில்லை. அரசின் சலுகைகள் மக்களுக்கு சேர வேண்டும். மக்களோடு சேர்ந்து மக்கள் பணியாற்றவே நியமிக்கப்பட்டுள்ளேன். காமராஜர், மார்ஷல் நேசமணி போன்ற தன்னலமற்ற தலைவர்களிடம் நான் தொண்டனாக பணியாற்றியவன். என் சேவை தொடரும்’ என்றார்.

அதிர வைக்கும் உள்குத்து

வசந்தகுமார் கன்னியாகுமரி மாவட்டம் வந்த அன்றே அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியது. நாகர்கோவில் நகரின் பிரதான பகுதிகளில் வசந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள்’ என்ற பெயரில் பதாகைகள் பள பளத்தன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு கட்டப்பட்ட இந்த பதாகைகள், சனிக்கிழமை காலை வரை இருந்தன. அதன்பின் திடீரென மாயமாகிவிட்டன.

மாற்ற தீர்மானம்

குமரி மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ சிறுபான்மை கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. வின்சென்ட் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சிறுபான்மை மக்களுக்கு உழைப்பவருக்கு மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பது, கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளரை மாற்றி விட்டு, முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ்க்கு சீட் கொடுக்க வலியுறுத்துவது, அப்படி இல்லையெனில் யாருக்கு வாக்களிப்பது என அனைத்து கிறிஸ்தவ சங்கங்களும் கூடி முடிவெடுப்பது, என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சொந்த கட்சிக்குள் இருக்கும் குழப்பங்களில் இருந்து முதலில் வசந்தகுமார் வெளிவந்தால் மட்டுமே, பிரச்சாரக் களத்தில் ஜொலிக்க முடியும், என்கின்றனர் உண்மை விசுவாசிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x