

டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2015 - 2016-ம் ஆண்டுக்கான குரூப்-4 தேர்வில் அடங்கிய இளநிலை உதவியாளர் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத்தேர்வு கடந்தஆண்டு நவம்பர் 16-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி 21-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 20 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) நடைபெற உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி, நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த அழைப்பாணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத் திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண்,தரவரிசை, இடஒதுக்கீட்டு பிரிவு மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்படுவர். எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதிகூற இயலாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.