காணாமல் போகும் கலைப் படைப்பு

காணாமல் போகும் கலைப் படைப்பு
Updated on
2 min read

அந்தக் காலக் கட்டிடங்களில் வெளிச்சம் வருவதற்காக வீட்டின் முன்பகுதிகளில் பெரிய கிராதிகள் வைக்கும் வழக்கம் முன்பு இருந்தது. இவற்றில் பெரும்பாலும் இரும்புக் கிராதிகள்தான் பயன்பாட்டில் இருந்தன.

ஆனால், பின்னால் அதே அளவு சிமெண்ட் கிராதிகளும் பயன்பட்டுவந்தன. ஆனால், இப்போது இவை இரண்டும் பயன்பாட்டில் இருந்து மறைந்துவிட்டன. கட்டுமானங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் இதுபோன்ற கிராதிகள் வைக்கும் வழக்கம் மறைந்துவருகிறது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளை அலங்கரித்த இந்த சிமெண்ட் கிராதிகள், இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

கட்டுமானப் பணியாளர்களும், வீடு கட்டுபவர்களும் இந்த சிமெண்ட் கலைப்படைப்புகளை வாங்குவதற்கு இப்போது முன்வருவதில்லை. இதனால், பல சிமெண்ட் ஜாலி தயாரிப்பாளர்கள் வருமானம் இழந்து தங்கள் தொழில்களைக் கைவிட்டு வருகிறார்கள்.

“கையால் செய்யப்படும் சிமெண்ட் கிராதிகள் அழகான ஜன்னல்களாகவும் பயன்பட்டன. ஆனால், வீடுகளில் கொசு வரக் கூடாது என்பதால் இப்போது மக்கள் இதை வாங்குவதில்லை” என்கிறார் பரம்பரையாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் எஸ். வில்சன். குடும்பத் தொழிலாக இதைச் செய்துவந்த இவர் அண்ணன் சந்திராசிங் இப்போது பேன்ஸி ஸ்டோர் வைத்திருக்கிறார்.

“நான் இப்போது பழைய டிசைன்களைச் செய்வதில்லை. கடப்பா கல்லில்தான் பல்வேறு விதமான டிசைன்களைச் செய்து கொண்டிருக்கிறேன். சுற்றுச் சுவர்களில் டிசைன்களாகப் பயன்படுத்தும் வெகு சில வகைகள் மட்டுமே என்னிடம் இருக்கின்றன”, என்கிறார் இவர்.

கிணறுகளுக்குக் கட்டுமான வளையங்கள் செய்துகொண் டிருந்தவர்கள், தோட்டங்களுக்கு அலங்காரச் சிலைகள் செய்துகொண்டிருந்தவர்கள், கைப்பிடிச் சுவர் செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது பூந்தொட்டிகளும், கான்கிரீட் ப்ளாக்குகளும், ஃப்ளைஆஷ் செங்கல்களும் செய்யப் போய்விட்டனர்.

இந்தக் காலமாற்றத்தை சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் இரண்டு கடைகள் மட்டுமே சமாளித்து வருகின்றன. எம். நடராஜன் சிமெண்ட் ஆர்ட் ஒர்க்ஸ், எத்திராஜன் சிமெண்ட் ஒர்க்ஸ் இந்தக் கடைகளில் இப்போது கிராதிகள் செய்யப்படுகின்றன. இந்தக் கடைகள் மெட்ராஸ் சிமெண்ட் ஆர்ட் ஒர்க்ஸை 1933-ல் ஆரம்பித்த மாணிக்கம் குடும்பத்தினருடையது.

“என் தாத்தாதான் இந்த சிமெண்ட் தொழிலை ஆரம்பித்தார். அவருடைய மகன்கள் எம். ராமானுஜம், எம். எத்திராஜன் மற்றும் என் அப்பா எம். நடராஜன் ஆகியோர் தொடர்ந்து இந்தத் தொழிலை நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில், நாங்கள் ஹைட்ராலிக் மொசைக் டைல்கள் செய்ய ஆரம்பித்தோம். அதற்காக 1970 ஜப்பான் எக்ஸ்போவில் எங்களுக்கு விருது கிடைத்தது”, என்கிறார் என். சேகர். இப்போது எம். நடராஜன் சிமெண்ட் ஆர்ட் ஓர்க்சைத் தன் சகோதரர்கள் என். தர், என். சுகுமாருடன் இவர் நடத்தி வருகிறார்.

இப்போது சேகர் கடையில தயாரிக்கப்படும் கிராதிகள் உட்பிரிவுச் சுவர்களாகவும், சுழல் படிகளாகவும், கைப்பிடிகளாகவும், பூந்தொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

“ஆனால், மெட்ரோ வேலைகள் நடைபெற்று வருவதால் எங்கள் உற்பத்திப் பிரிவை இன்னும் ஆறு மாதத்தில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். எவ்வளவு காலம் எங்களால் இந்தத் தொழிலை செய்ய முடியும் என்று தெரிய வில்லை” என்று சொல்கிறார் சேகர்.

© தி இந்து (ஆங்கிலம்)

தமிழில்: என். கௌரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in