

ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் மூலம் இலங்கைத் தமிழர்களை, இந்திய அரசு ஏமாற்றி விட்டதாக, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக் காக வாதாடிய, ராம்ஜெத்மலானிக்கு ம.தி.மு.க வழக்கறிஞர் பேரவை சார்பில், சனிக்கிழமை பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு வந்த ராம்ஜெத் மலானிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டதில், ராம்ஜெத் மலானிக்கு முக்கிய பங்கு உண்டு. அவர்கள் மூவரையும் விடுவிக்க, அவர் கடுமையாக பாடுபட்டு வருகிறார்.
இந்த வழக்கில் மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற, அவர் பணம் வாங்காமல் வாதாடியுள்ளார். அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். தற்போது 90 வயதாகும் ராம்ஜெத்மலானி, 120 ஆண்டுகள் நோய் நொடியின்றி நன்றாக வாழ வேண்டும். அவரது 100வது பிறந்தநாள் விழாவை, ம.தி.மு.க கொண்டாடும். இவ்வாறு வைகோ பேசினார்.
இதைத் தொடர்ந்து ராம்ஜெத் மலானி தனது ஏற்புரையில் பேசியதாவது:
இலங்கைத் தமிழர்களுக்கு ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் மூலம் இந்திய அரசு துரோகம் செய்து விட்டது. இலங்கையில் போராடுவதற்கு, விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததே இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு தான். ஆனால் தற்போது அவர்களின் வாழ்வை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது.
மோடிக்கு அதிக ஆதரவு
வரும் தேர்தலில் நரேந்திர மோடி அதிக ஆதரவு பெறுவார். அவர் இந்திய நலன் காக்க வந்துள்ளவர். ஆனால், காங்கிரஸ் பல தவறுகளை செய்து, ஆம் ஆத்மி கட்சி போன்ற குட்டிக்கட்சிகளின் போர்வையில் மறைக்கப் பார்க்கிறது.
மரண தண்டனையை வேண்டாமென்று நான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன். ஒருவருக்கான மரண தண்டனையை இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றாவிட்டால், அதை ஆயுளாகக் குறைக்க, சட்டத்தில் இடமுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்தது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் ம.தி.மு.க வழக்கறிஞரணியைச் சேர்ந்தோர் திரளாகப் பங்கேற்றனர்.