

வழக்கறிஞர்கள் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வழக்கறிஞர்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி கடந்த ஒரு மாதமாக தமிழக வழக்கறிஞர்கள் போராடி வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, நீதிபதிகளே நேரடியாக நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் தேவையற்றது. இது வழக்கறிஞர்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற சட்டம் இல்லை.
கடந்த ஒரு மாதமாக நீதிமன்றப் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ரயில் மறியல் என வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வழக்காடும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இப்பிரச்சினயில் தமிழக அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.