

கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரையில் சுரங்க வழிப் பாதையில் 5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
சென்னையில் 2 வழித் தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 24 கி.மீ தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழி பாதையும், 21 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்ட ரயில் பாதையும் (13 ரயில் நிலையங்கள்) அமைத்து இயக்கப்படவுள்ளன. இரண்டாவது வழித் தடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, சின்னமலை விமான நிலையம் பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இது அடுத்த 2 மாதங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரையில் மொத்தம் 8 கி.மீ. தூரத்துக்கு 6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டன. இதில், கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான முழு பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரையிலான 5 கி.மீ. தூரத்துக்கு சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரையில் ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் ரயில் இன்ஜின் மூலம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ரயில் பாதையின் தன்மை குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளோம்.
இந்த சோதனையின்போது மெட்ரோ ரயில் அதிகாரிகள் ரயில் பாதை தரம், ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் சரியான இடத்தில் நிற்கிறதா? ரயில் பாதை பக்கவாட்டில் போதிய இடவசதி இருக்கிறதா? உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். 3 அல்லது 4 மாதங்களுக்கு தொடர்ந்து சோதனை நடக்கும். அடுத்த 6 மாதங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.