

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சிறப்பு நிர்வாக செயற்குழு கூட்டம் ஸ்ரீரங்கத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமி ழகத்தில் சிவகங்கை தொகுதி நீங்கலாக மற்ற தொகுதிகளில் அதிமுகவை ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ முன்னேற்ற கழகம் ஆதரவு
கிறிஸ்தவ முன்னேற்ற கழகத்தின் தலைவர் எஸ்.ஜோசப் பெர்னாண்டோ கூறியதாவது:
அதிமுக அரசு கிறிஸ்தவ மக் களுக்கு பல்வேறு திட்டப் பணிகளை செய்துள்ளது. கிறிஸ்தவ பள்ளிகள், ஆலயங்கள் அதனைச் சார்ந்த சொத்துக்களுக்கு வரிவிதிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் 500 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வர மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிற மத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உள்ளது போல சலுகைகளை வழங்க மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். வெங்கையா நாயுடு பேசும்போது, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இயேசு அனுப்பிய ரட்சகர் என தெரிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்று அவர் கூறினார்.