

தமிழகத்தில் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தி, போதிய கால அவகாசம் கொடுத்து, மாணவர்களைத் தயார் படுத்திய பிறகு பொறியியல் படிப் புக்கு பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரலாம் என்று பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு முறை (நீட்) கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கும் தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு கொண்டுவருவது குறித்து மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. டெல்லியில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளது. மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டதற்கே தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரண மாக, முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் வேண்டுகோளை ஏற்று நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்துக்கு கடந்த ஆண்டு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இதனால், சென்ற ஆண்டு வழக்கம் போல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
தற்போது நீட் தேர்வு தொடர் பாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த நிலை யில், பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரும் திட்டம் குறித்து பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் கள் தெரிவித்த கருத்துகள்:
அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.பாலகுருசாமி:
பொறியியல் படிப் புக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வருவது நல்லது. அப்போதுதான் பொறியியல் படிப்புக்கு தரமான மாணவர்கள் கிடைப்பார்கள். நுழைவுத் தேர்வு இருந்தால்தான் மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்க முடியும். எனவே, பொறி யியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கொண்டுவருவதை எதிர்க்கக் கூடாது. தேசிய அளவிலான நுழை வுத் தேர்வுக்கு நமது மாணவர்களை தயார்படுத்த வேண்டும். அதற்குப் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். பாடத்திட்டத்தை தரம் உயர்த்துவதை விட்டுவிட்டு அரசியல் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்களுக்காக நுழைவுத் தேர்வை எதிர்க்கக் கூடாது. அவ்வாறு எதிர்த்தால் அது நமது மாணவர்களுக்குத்தான் இழப்பு.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர்:
தற்போது நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அதாவது ஏறத் தாழ 65 சதவீதம் அளவுக்கு பொறியியல் படிப்பில் சேருகிறார் கள். கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பொது நுழைவுத் தேர்வு வந்தால் அது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தேசிய அளவில் பொறி யியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டாலும் அதில் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் நுழைவுத் தேர்வு இயக்குநர் பி.வி.நவநீதகிருஷ்ணன்:
தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தொழிற்கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளிலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேரும் மாணவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் கிராமப்புற மற்றும் அரசு பள்ளி மாணவர்களாக இருக்கிறார்கள். பொறியியல் படிப்புக்கு திடீரென தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு கொண்டுவந்தால், இந்த மாண வர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அடிப்படையில் நமது கேள்வித்தாள் முறையானது மனப்பாட அறிவை சோதிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. பாடத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ, அதை அப்படியே எழுதினால்தான் முழு மதிப்பெண் கிடைக்கிறது. ஆனால், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் கேள்வித்தாள் முறை மனப்பாட அறிவை அல்லாமல் பயன்பாடு சார்ந்து, ஆராயும் திறன் சார்ந்து இருக்கும். எனவே, பாடத்திட்டத்தை மாற்றி, கேள்வி முறையை மாற்றி, புதிய முறைக்கு மாணவர்களைத் தயார்படுத்தி விட்டு நுழைவுத் தேர்வை தாராளமாக கொண்டுவரலாம். பிளஸ் 2 தேர்வுக்கு மாணவர்கள் உயிரைவிட்டுப் படிக்கிறார்கள். எனவே, நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கும் மாணவர் சேர்க்கையில் வெயிட்டேஜ் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வே.மணிவாசகன்:
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கால அவகாசமும் அளிக்காமல் திடீரென பொது நுழைவுத் தேர்வு கொண்டுவந்தால் அதை ஏற்க முடியாது. ஆனால், நுழைவுத் தேர்வை தடுப்பது மட்டுமே வெற்றியாக இருக்க முடியாது. அதற்கு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டியது அவசியம். ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்னரே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வடி வமைத்துள்ள பாடத் திட்டத்தையும், வினாத்தாள் முறையையும் கொண்டுவந்துவிட்டனர். ஆனால், தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நீண்டகாலமாக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வில்லை. பொதுவாக நுழைவுத் தேர்வில் அறிவாற்றலை சோதிக்கும் வகையில்தான் வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், நமது கேள்விமுறை 80 சதவீதம் மனப்பாட அறிவை சோதிக்கும் வகையிலும் 10 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே அறிவாற்றலை சோதிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. தற்போதைய பாடத்திட்டமும், கேள்விமுறையும் இருந்தால் நமது மாணவர்களால் பொது நுழைவுத் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்?