

தமிழகம் முழுவதும் 5.20 லட்சம் தாய்மார்கள் அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் பெற்று பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 'அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம்' வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்திட்டத்தை கடந்தாண்டு செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பெற்ற தாய்மார்களுககு அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் உடனடியாக வழங்கப்படுகிறது.
இப்பெட்டகத்தில் குழந்தைக்கான துண்டு, உடை, படுக்கை, கொசுவலை, நாப்கின், எண்ணெய், குளியல் திரவம், குளியல் சோப்பு, சோப்பு பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை மற்றும் தாய்க்கான கைகழுவும் திரவம், குளியல் சோப்பு, சவுபாக்கிய சுண்டி லேகியம் மற்றும் அவற்றை வைக்கும் பெட்டகப் பை ஆகிய 16 பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த பெட்டகம் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மருந்து கிடங்குகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கு, ஆண்டுக்கு ரூ.50 கோடி என இதுவரை ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்து 20 ஆயிரம் தாய்மார்கள் பயனடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தனர்.