

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த அம்மா உணவக ஊழியர்களை தூய்மை ஆர்வலர்களாக சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.
சென்னை மாநகரின் பரப்பு, தற்போது 426 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சென்னையில் 71 லட்சம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் தினமும் உருவாகும் 4 ஆயிரம் டன் குப்பை, கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இரு குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை வகை பிரிக்காமல் கொட்டுவதால், அவற்றை அழிப்பது உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
அதை தீர்க்கும் விதமாக மத்திய அரசு, கடந்த 2000-ம் ஆண்டில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை உருவாக்கியது. அதில் குப்பை உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறு சுழற்சிக்கு உகந்த குப்பை என வகை பிரித்து வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகள் உருவாக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதை செயல்படுத்துவது சென்னை மாநகராட்சிக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசால் தூய்மை இந்தியா திட்டம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின் கீழ், குப்பைகளை வகை பிரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதற்காக மாநகராட்சி சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிரை களத்தில் இறக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக, அந்த மகளிருக்கு ‘தூய்மை ஆர்வலர்’ என்ற தன்னார்வ பதவியையும் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அம்மா உணவக ஊழியர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள். அங்குள்ள மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதனால் அவர்கள் மூலம் குப்பைகளை வகை பிரிப்பது தொடர்பாக, அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். குப்பைகளை வகை பிரித்து வழங்குவது தொடர்பாக அவர்களுக்கு பயிற்சியும் வழங்கியிருக்கிறோம். இனி சென்னையில் குப்பைகளை வகை பிரித்து வழங்குவது உறுதி செய்யப்படும். அதன் மூலம் மறுசுழற்சிக்கு உகந்தவை பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் மட்டும் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
இதனால் வளாகங்களுக்கு கொண்டு செல்லும் குப்பைகள் குறைவதுடன், மாநகராட்சிக்கு குப்பை மேலாண்மைக்கான நிர்வாக செலவும் குறையும். அம்மா உணவக ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதால், அவர்களின் ஓய்வு நேரத்திலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இதனால் அம்மா உணவக பணிகள் எந்த வகையிலும் பாதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.