Published : 26 Mar 2017 10:26 AM
Last Updated : 26 Mar 2017 10:26 AM

ஆர்.கே.நகர் களத்தில் 72 வேட்பாளர்கள்: மின்னணு வாக்குப்பதிவா? வாக்குச்சீட்டு முறையா? - நாளை முடிவு தெரியும்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 70-க்கும் மேற்பட்டோர் போட்டியிட இருப்பதால், மின்னணு வாக்குப் பதிவை நடத்துவதா அல்லது பழைய முறைப்படி வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடத்துவதா என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படுகிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகு திக்கு ஏப்ரல் 12-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 16ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 127 மனுக்கள் பெறப்பட்டன. தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் தலைமையில் நடந்த பரிசீலனையில் பல்வேறு காரணங்களுக்காக 45 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 82 மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதான வேட்பாளரின் மனுக்கள் ஏற்கப்பட்டதால் 10 மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் நாளை தகுதி இழந்துவிடும். மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நாளை வரை உள்ளது. அன்று பல வேட்புமனுக்கள் திரும்பப் பெற வாய்ப்பிருப்பதாக தேர்தல் அலுவலர்கள் கருதுகின்றனர்.

களத்தில் 63 வேட்பாளர்கள் வரை இருந்தால் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியும். அதற்குமேல் இருந்தால் வாக்குச்சீட்டு முறை யில்தான் வாக்குப்பதிவை நடத்த வேண்டியிருக்கும்.

இதுதொடர்பாக தேர்தல் அதி காரி ஒருவர் கூறும்போது, ‘‘ஒரு மின்னணு வாக்குப்பதிவு கட்டுப் பாட்டு இயந்திரத்தில் 4 வாக்குப் பதிவு இயந்திரங்களை இணைக்க முடியும். ஒவ்வொரு இயந்திரத்தி லும் 16 வாக்காளர்களுக்கான பொத்தான்கள் இடம் பெற்றிருக் கும். அதன்படி 4 இயந்திரங்களை யும் சேர்த்தால் 64 வேட்பாளர்களுக் கான பொத்தான்கள் இருக்கும். அதில் ஒன்று ‘நோட்டா’வுக்கு வழங்க வேண்டும். மீதம் உள்ள 63 பொத்தான்களைத்தான் வேட் பாளர்களுக்கு வழங்க முடியும்.

எனவே, வேட்பாளர்களின் எண் ணிக்கை 63-க்கு மேல் இருந்தால், மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தை பயன்படுத்த முடியாது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போதுதான், வாக்குப்பதிவை எந்த முறையில் நடத்துவது என்பது தெரியவரும். திங்கட்கிழமை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரான பிறகுதான் சரியான நிலவரம் தெரியவரும்’’ என்றார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் 50 அமைவிடங்களில் 256 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றுக்கு தேவையான 330 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 350 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. சுமார் 60 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், மேலும் பல வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார் செய்ய வேண்டி இருக்கும்.

ஒருவேளை வேட்பாளர்களின் எண்ணிக்கை 63-ஐ தாண்டினால் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப் பதிவை நடத்த வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வெளிப்படை தன்மைக்காக யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் இயந்திரத்தை வைக்க தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், வாக்குச்சீட்டு முறை கொண்டு வந்தால், அந்த முயற்சி வீணாகும். இது தொடர்பான முடிவு நாளை மாலை 3 மணிக்கு மேல் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x