Published : 15 Mar 2017 09:17 AM
Last Updated : 15 Mar 2017 09:17 AM

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும்: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு புதிதாக 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறையில் 286 பணியிடங்கள், 623 பின்னடைவு இடங்கள் (பேக்-லாக் வேகன்சி), அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (ஆர்எம்எஸ்ஏ) 202 பணியிடங்கள் அடங்கும். ஏற்கெனவே நடந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், முன்பு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், பிஎட் படித்துக் கொண்டிருக்கும்போது தகுதித் தேர்வில் தற்போது அப்படிப்பை முடித்தவர்கள் தேவையான விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான கடைசி தேதி மார்ச் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதல் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து விளக்கம் பெற சென்னை டிபிஐ வளாகத்தில் ஈ.வி.கே. சம்பத் மாளிகை கட்டிடத்தில் இயங்கி வரும் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில்தான் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது.

முந்தைய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நிலையில், அக்காலியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் மையத்துக்கு நேற்று வந்திருந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது:

பள்ளிக் கல்வித்துறை, ஆர்எம்எஸ்ஏ என பல்வேறு பிரிவுகளின் கீழ் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால், எந்தெந்த பாடங்களில் எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்ற விவரம் வெளியிடப்படவில்லை. பாட வாரியாக காலியிடங்களை வெளியிட்டால்தான் பணிவாய்ப்பு கிடைக்குமா என்று பல்வேறு கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும் ஆசிரியர்களால் ஊகிக்க முடியும். பாட வாரியான காலியிடங்கள் வெளியிடப்படாததால் குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்தைப் போக்கும் வகையில் பாடப்பிரிவு மற்றும் இடஒதுக்கீடு வாரியாக பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x