

எண்ணூர் காமராஜர் துறை முகத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வெளிவந்துள்ள செய்தி குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையிடம் விவர அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனி யாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சிப்பது தொடர்பாக மாதவரம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசும்போது, ‘‘எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார்மயமாக் கக்கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண் டார். அதற்கு பதிலளித்து முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காமராஜர் துறை முகம் (எண்ணூர் துறைமுகம்) மத்திய அரசின் மினி ரத்னா அந் தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனம் ஆகும். உறுப்பினர் கூறுவது போல அதை தனியார் மயமாக்கு வது தொடர்பாக காமராஜர் துறை முக நிர்வாகம் மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையி டம் இருந்து எவ்வித அறிக்கையும் அரசுக்கு வரவில்லை. இத்துறை முகத்தின் மத்திய அரசின் 100 சத வீத பங்குகளை விலக்கிக் கொள்வ தாக கடந்த 19-ம் தேதி பத்திரிகை யில்தான் செய்தி வெளியாகியுள் ளது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் இருந்து இதுதொடர்பான விவர அறிக்கை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.