

வட தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையால் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் அநேக இடங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழகத்தில் மழை நீடிக்கும். ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
வங்கக் கடலில் உருவாகி வட தமிழகத்தின் மேல் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை முழுவதுமாக ஆந்திரம் நோக்கி நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை 4 அல்லது 5 நாள்களில் அரபிக் கடல் நோக்கி நகரலாம்.
வியாழக்கிழமை காலை வரை முடிந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. சேந்தமங்கலத்தில் 5 செ.மீ. மழையும், வாடிப்பட்டியில் 4 செ.மீ. மழையும், தரங்கம்பாடி, தொழுதூர், பொன்னேரியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னை நுங்கம்பாக்கத்தில் 2.6 மி.மீ. மழையும் விமான நிலையத்தில் 2.3 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.