

தீ விபத்தின்போது உயிர் பயத்தில் பலர் ஜன்னல் வழியே மெத்தையை கீழே போட்டு அதில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
தீ விபத்தில் உயிர் தப்பிய கார்த்திக் என்பவர் கூறும்போது, “தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.
அப்போது, எனது அறைக்குள் திடீரென அதிக புகை வந்தது. வெளியே அனைவரும் கூச்சலிட்ட வாறு ஓடுவதை அறிந்தேன். உடனே நான் 3-வது தளத்திலிருந்து 2-வது தளத்துக்கு வந்து அங்கிருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பினேன். இதனால், எனக்கு காயம் ஏற்பட்டது” என்றார்.
தேவிகா என்பவர் கூறுகையில், “இரண்டாவது தளத்தில் வசித்து வருகிறேன். எங்கள் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டபோது என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது ஒருவர் சிறிய மெத்தையை ஜன்னல் வழியாக கீழே தூக்கிப்போட்டு அதன் மீது குதித்து உயிர் தப்பினார். அதேபோல் மேலும் பலர் கீழே குதித்து உயிர் தப்பினர். எனக்கு பயமாக இருந்ததால் கதறி அழுதேன். அப்போது தீயணைப்பு வீரர்கள் பெரிய ஏணி மூலம் என்னை மீட்டனர்” என்றார்.
ஆட்சியர் நேரில் ஆய்வு
தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் நேற்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, “விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன் அடிப் படையில் நடவடிக்கை எடுக்கப் படும். தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
தீயணைப்புத்துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் கூறும்போது, “அடுக்குமாடி குடியிருப்பில் அனைத்து அறைகளும் காற்றோட் டமாக இருக்க வேண்டும். அங்கு தேவையான தீயணைப்பு உபகரணங்கள் இருக்க வேண்டும். சிறிய தீ விபத்து ஏற்பட்டாலும் எச்சரிக்கை செய்யும் வகையில் எச்சரிக்கை ஒலிப்பான்கள் இருக்க வேண்டும். மின்சார இணைப்பு பெட்டி அருகே எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை வைக்கக் கூடாது. வெயில் காலங்களில் மின்சார பெட்டி அருகே கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.
தலா ரூ.1 லட்சம் நிவாரணம்
முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்ட செய்தியில், ‘தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என கூறியுள்ளார்.