Published : 02 Jan 2017 09:22 AM
Last Updated : 02 Jan 2017 09:22 AM

குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு திட்டத்தில் அரசு மெத்தனம்: திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம்

குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருந்து வருவதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி இன்று முதல் தொடங்குகிறது. தற்போது உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2017 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர், அந்த துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏழை மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவும், முகவரிக்கான முக்கிய அடையாள ஆவணமாக வும் திகழும் குடும்ப அட்டைகள் விஷயத்தில் அதிமுக அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருவது கண்டனத்துக்குரியது.

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, அதற்கு ரூ.700 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. 2015-ல் தமிழக சட்டப்பேரவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்காக ரூ.318 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், சென்னை, திருச்சி போன்ற மாவட்டங்களில் முதற்கட்டமாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால், இன்றுவரை அந்த இரு மாவட்டங்களில் கூட இத்திட்டம் அமலுக்கு வரவில்லை.

சட்டப்பேரவையில் ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்காக ஒதுக்கப் பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் அறிவித்த ரூ. 318 கோடி நிதி என்ன ஆனது? என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்திலிருந்து அதிமுக அரசு பின் வாங்கிவிட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தமிழக அரசு குடும்ப அட்டைகளில் தாள் ஒட்டும் பணியில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல், ஏற்கெனவே அறிவித்தபடி ஸ்மார்ட் கார்டு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வுகள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முக்கியம் என்பதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தில் முதலமைச்சர் மிக முக்கியக் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x