Published : 03 May 2017 17:25 pm

Updated : 28 Jun 2017 16:15 pm

 

Published : 03 May 2017 05:25 PM
Last Updated : 28 Jun 2017 04:15 PM

மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட அணி திரள்க: மார்க்சிஸ்ட் அழைப்பு

மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட அணி திரள வேண்டும் என்று தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் இன்று சென்னையில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய பாஜக, மாநில அதிமுக அரசின் செயல்பாடுகளால் தமிழக மக்கள் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஜெ ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை காலந்தொட்டு கடந்த 7 மாதங்களாக மாநில அரசு நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி, விவசாய தற்கொலைகள் மற்றும் அதிர்ச்சி சாவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசு பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெயரளவுக்கான நிவாரணமே வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத் தொழிலாளர்களுக்கு சல்லிக்காசு கூட நிவாரணமாக வழங்கப்படவில்லை. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி பாக்கி வழங்கப்படவில்லை. இத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த கோரி பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராடி வருகின்றனர்.

மாநிலம் முழுவதுமே குடிநீர் பற்றாக்குறை பூதாகாரமாக வெடித்துள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் ஆதார ஏரிகள் வறண்டுவிட்டன. இதர நகரங்களிலும், கிராமங்களிலும் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. அன்றாடம் மக்கள் குடங்களோடு குடிநீர் கோரி தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்த அரசிடம் உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. வறட்சி காலத்தில் பயன்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள், பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி பராமரிப்பதற்கான நடவடிக்கை ஏதுமில்லை.

நியாய விலைக் கடைகளில் பருப்பு வகைகள், கோதுமை வழங்கப்படாததுடன் அரிசியின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் எண்ணற்ற குளறுபடிகளால் பல லட்சம் பேருக்கும் கார்டுகள் வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் கல்வித்துறை சீர்குலைந்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதமான இட ஒதுக்கீட்டை அரசு பெற தவறியுள்ளதை உயர் நீதிமன்றம் இடித்துக்காட்டியதுடன் தமிழக அரசுக்கு 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நீட் தேர்வை அமலாக்கியதால் தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதுநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு தமிழக அரசு மருத்துவர்களுக்கு இருந்த 50 சதமான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தனியார் சுயநிதி பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி 25 விழுக்காடு இடங்களை ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. தனியார் பள்ளிகளிலும், சுயநிதிக் கல்லூரிகளிலும் கட்டணக் கொள்ளை தொடர்ந்து வருகிறது. இவைகளை தமிழக அரசு முறைப்படுத்தத் தவறிவிட்டது.

சிறுதொழில்கள் முடங்கி பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அறவே இல்லை.

மக்கள் விருப்பப்படி மதுவிலக்கினை அமல்படுத்த மறுக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப் படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறந்திட மாற்று வழிகளில் முயற்சிக்கிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. கொடநாடு பங்களா கொள்ளை, கொலை அதைதொடர்ந்த விபத்து சாவுகள் என பல மர்ம முடிச்சுகள் உருவாக்கியுள்ளன.

மத்திய பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. வறட்சி நிவாரணமாக சொற்பத் தொகையினை மட்டுமே வழங்கியுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மறுத்து வருகிறது. உணவுப்பாதுகாப்புச் சட்டப்படி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட அரிசி, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்ததுடன் விலைகளையும் உயர்த்தியுள்ளது. நீட் தேர்வை திணிப்பதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

தமிழகம் உட்பட இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை கட்டாயமாக திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மத்திய பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்தி படிப்பை கட்டாயப்படுத்துவது, கிலோ மீட்டர் கற்களில் ஊர் பெயர்களை இந்தியில் எழுதுவது, தமிழ் திரைப்படங்களில் இந்தியை சப் டைட்டிலாக போட கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட பல கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

மதுரை கீழடியில் அகழாய்வை திசைமாற்றும் நோக்கோடு நிதியை நிறுத்துவது, ஆய்வுப்பணி துணை இயக்குநரை தேவையின்றி இடமாற்றம் செய்வது ஆகியவை மூலம் தமிழக பண்பாட்டின் மீதும் பாஜக அரசு தாக்குதலை தொடுத்து வருகிறது.

முக்கிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்க முடிவெடுத்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க தனியார் கம்பெனிக்கு அனுமதி வழங்கியுள்ளதன் மூலம் நெடுவாசல் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.

தமிழகத்தை வஞ்சிக்கும் இத்தகைய மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழக அரசு குரலெழுப்ப திராணியற்றுள்ளது. மேலும் இத்தகைய மத்திய அரசை மாநில அமைச்சர்கள் விமர்சிக்கக் கூடாது என முதல்வர் சக அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதன் மூலம் தமிழக மக்களின் நலன்களை காவுகொடுத்து மத்திய அரசுக்கு தொண்டூழியம் செய்யும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

அதிமுக தலைவர்களுக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் விளைவாக தற்போது இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளனர். இப்பிளவு மக்கள் நலனை மையமாக வைத்து உருவானதல்ல. ஆட்சி அதிகாரத்தையும், கொள்ளையடித்த பணத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான போட்டியின் விளைவே இந்தப் பிளவு. இவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து ஆட்சி நடத்திய காலத்தில் தான் தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. லஞ்சமாக பெற்ற தொகைகள் கைமாறின. சேகர்ரெட்டியும், ராம் மோகன் ராவும் இவர்களின் கூட்டாளிகளும் யாருக்காக செயல்பட்டார்கள் என்பது தமிழகம் அறிந்ததே.

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முனைந்தார் என்ற வழக்கில் தினகரன் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனால் பணம் பெறத் தயாராக இருந்த தேர்தல் ஆணைய அதிகாரி யார் என்பது வெளிப்படுத்தப்படவில்லை. மேற்கொள்ளப்படும் வருமான வரி சோதனைகள் மீது தொடர் நடவடிக்கைகள் ஏதுமில்லை.

சோதனைக்குள்ளான ராம மோகன் ராவ் சில வாரங்களிலேயே மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார். உயர்மட்ட ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் அமைப்பதை மத்திய பாஜக அரசு எவ்வாறு கிடப்பில் போட்டுள்ளது என்பதை உச்ச நீதிமன்றமே இடித்துக் காட்டியுள்ளது. எனவே ஊழலை ஒழிப்பது என்பதல்ல பாஜகவின் நோக்கம்.

மாறாக அதிமுக கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி இரண்டு அணிகளைச் சார்ந்தவர்களின் ஊழல்கள், பணம், சொத்துக்கள் இவற்றைக்காட்டி மிரட்டி அதிமுகவை தனது செல்வாக்கு வளையத்திற்குள் கொண்டு வரும் அரசியல் சூழ்ச்சியே தவிர வேறல்ல.

இத்தகைய சூழலில் மாற்று அரசியலை முன்வைத்து நடைபெறுகிற மக்கள் போராட்டங்கள் வலுவடைய வேண்டும். பாஜக அரசின் தமிழக விரோத நடவடிக்கைகளையும், மதவெறி செயல்பாட்டையும் பின்தள்ளவும், தமிழக மக்கள் சந்தித்துக் கொண்டுள்ள அடிப்படையான பிரச்சினைகள் மீது மாநில அரசை செயல்பட வைக்கவும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களை நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவி அழைக்கிறது'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மக்கள் விரோதக் கொள்கைஎதிராகப் போராட அணி திரள்கமார்க்சிஸ்ட் அழைப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author