

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கோருவதன் மூலம் தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை அரசே குறைத்து மதிப்பிடுகிறது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபா கரன், இது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம் இல் லையா? எனவும் கேள்வி எழுப்பி யுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் திவ்யா ஷரோன் மற்றும் டாக்டர் எம்.காமராஜ் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
முதுநிலை மருத்துவ படிப்புக் காக நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் தங்களிடம் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் 50 சதவீதத்தை அரசிடம் அளிப்பதில்லை. ஆனால், கேரள மாநிலத்தில் அவ்வாறு இல்லை. உரிய இடங்களை அரசுக்கு அளிக்கின்றன.
அரசுக்கான இடங்களையும் தனியார் கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக்கொள்கின்றன. இதனால் எங்களைப் போல ஏராளமான மாண வர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை முறையாக அமல்படுத்த தமிழக அரசுக்கும், உரிய இடங்களை அரசிடம் ஒப்படைக்க தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி என்.கிருபா கரன் முன்பு நேற்று நடந்தது.
அப்போது அவர் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
நீட் தேர்வில் இருந்து தமி ழகம் விலக்கு கோருவது வருத்தத் துக்குரியது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப் படுவதாக கூறலாம். ஆனால் நீட் எங்களுக்கு வேண்டாம் எனக் கூறுவதன் மூலம், தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை அரசே குறைத்து மதிப்பீடு செய்கிறது. இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம் இல்லையா?
கோடிக்கணக்கில் பணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் மாணவர் எப்படி மக்களுக்கு இலவச சேவை செய்வார் என எதிர்பார்க்க முடியும். முதுகலை மருத்துவப் படிப்பில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மருத் துவ கவுன்சிலும் முறையாக கடைபிடிக்காமல் கல்வியை வணிகமாக்க அனுமதித்துள்ளது. தமிழகத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இந்த தொழில் நடப்பது வேதனைக்குரியது.
எனவே, தமிழகத்தில் ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு எத்தனை முதுநிலை மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள் கடந்த 2016-17-ம் கல்வியாண்டில் எவ்வாறு பூர்த்தி செய்யப்பட்டது?
இந்த இடங்கள் மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி முறையான கல்வித் தகுதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பூர்த்தி செய்யப்படுகிறதா? இதை மருத்துவ கவுன்சிலும் கண்காணிக் கிறதா? என்பது குறித்தும், வரும் கல்வியாண்டில் (2017-18) இந்த முதுநிலை மருத்துவ இடங்களை எப்படி பங்கிடப் போகிறீர்கள்? எந்த அடிப்படை யில் நிரப்பப்போகிறீர்கள்? என் பது குறித்தும் இந்திய மருத் துவ கவுன்சில் பதிலளிக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவ, மாணவியருக்கும் தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது? என்பதையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள மருத்துவ ஆசிரிய பயிற்றுநர்கள் குறித்த புள்ளி விவரங்களை இந்திய மருத்துவ கவுன்சில் பெற்றுள்ளதா? என்பது குறித்தும் விளக்க வேண்டும்.
இந்த வழக்கில் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். எனவே அவரும் இது தொடர்பாக உரிய பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.