

அரசு பஸ்களில் அதிமுக சின்னத்தை வரைந்து மக்கள் வரிப் பணத்தை வீணாக்குகிறார்கள் என்று சட்டப்பேரவை திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர். அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் சட்டப்பேரவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, "திமுக ஆட்சியில் குடிநீர் வழங்கல் வாரியம் கொண்டுவரப்பட்டு, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் குடிநீர் விற்கப்படுகிறது. அந்தக் குடிநீர் பாட்டிலில் அதிமுகவின் சின்னத்தை பதித்து விற்கின்றனர்.
அதேபோல், சமீபத்தில் முதல்வர் தொடங்கி வைத்த சிறிய பேருந்துகளிலும் அதிமுக சின்னம் வரையப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்களின் வரிப் பணத்தை வீணாக்குகிறார்கள். இதுகுறித்து, கேள்வி எழுப்ப முயன்றபோது, சட்டப் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டோம்" என்றார் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக, சென்னையில் இயங்கி வரும் சிறிய பஸ்களின் படத்தைக் காட்டி பிரச்சினையை எழுப்பி, அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததால், தி.மு.க. உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து ஒரு பிரச்சினையை எழுப்பி அதுகுறித்து பேச அனுமதி கேட்டார். அது பரிசீலனையில் உள்ளதால் பின்னர் அனுமதி அளிக்கப்படும் என்று அவைத் தலைவர் ப.தனபால் கூறினார்.
ஆனால், தி.மு.க.வினர் அனைவரும் எழுந்து சிறிய பஸ் படங்களைக் காட்டி முழக்கம் எழுப்பினார்கள். அனுமதியின்றி சபைக்கு படங்கள் கொண்டு வந்து காட்டியது இது சபைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்றார் பேரவைத் தலைவர். ஆயினும், தி.மு.க. வினர் தொடர்ந்து அதுகுறித்து பேச அனுமதிக்கும்படி வற்புறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, சபைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் தி.மு.க.வினர் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றும்படி தனபால் உத்தரவிட்டார். உடனே, தி.மு.க.வினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். அப்போது கோஷம் எழுப்பியபடியே வெளியேறினார்கள்.