Last Updated : 14 Mar, 2017 11:02 AM

 

Published : 14 Mar 2017 11:02 AM
Last Updated : 14 Mar 2017 11:02 AM

திண்டுக்கல்லில் 21 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்: தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள்

திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் 2.3 அடியாக நீர்மட்டம் குறைந்துவிட்டது. இதனால், நகருக்கு 21 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் நீர்த்தேக்கம், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளது. பருவமழை பொய்த்ததால் ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் போதுமான தண்ணீர் இல்லை. நீர்த்தேக்கத்தின் மொத்த அடி 23.5. தற்போது அணையில் 2.3 அடி தண்ணீர்தான் உள்ளது. ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து தினமும் 9.5 மில்லியன் லிட்டரும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து 6.5 மில்லியன் லிட்டரும் குடிநீர் பெறப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக மிக குறைவான அளவு தண்ணீரே பெறப்படுகிறது.

இதனால், திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் முன்பு வாரம் ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படும் கால இடைவெளி மேலும் அதிகரித்து, திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம் பகுதி நரிப்பாறைக்கு 21 நாட்களுக்கு பிறகு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து நரிப்பாறை பகுதியை சேர்ந்த செல்வி கூறுகையில்,

“நரிப்பாறை பகுதியில் ஆழ்துளை கிணறு வசதியில்லை. மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரை நம்பித்தான் உள்ளோம். தற்போது 21 நாட்களுக்குப் பிறகு விநியோகிக்கப்பட்ட தண்ணீரும் அனைத்து குடும்பங்களுக்கும் போதுமான அளவு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறிதான். இப்போதே நிலைமை இப்படியென்றால், அடுத்த மாதம் எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்றே தெரியவில்லை” என்றார்.

அதே பகுதியை சேர்ந்த சந்திரா கூறும்போது,

“குடிநீர் பிடித் துக் கொண்டி ருக்கும் இடத்துக்கு அருகிலேயே குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நகரில் குழாய்களில் கசிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து சரிசெய்தாலே தண்ணீரை ஓரளவு சேமிக்கலாம். தண்ணீரை நாங்கள் மிக சிக்கனமாகத்தான் பயன் படுத்திவருகிறோம். இருந்த போதும் 21 நாட்கள் ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்தால், சிறிய குடும்பங்களால் கூட சமாளிக்க முடியாது” என்றார்.

மார்ச் இறுதிவரை சமாளிக்கலாம்

இது குறித்து திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான ஆத்தூர் நீர்த்தேக்கம், மிகக் குறைந்த அளவான 2.3 அடியை எட்டிவிட்டது. கடந்த சில தினங்களாக மழை பெய்தபோதும், நீர்த்தேக்கத்துக்கு போதிய தண்ணீர் வரத்து இல்லை. தற்போது நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரைக் கொண்டு மார்ச் இறுதிவரை மட்டுமே நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும். அதற்குள் பலத்த கோடைமழை பெய்தால்தான் நீர்வரத்து அதிகரிக்கும். குடிநீர் விநியோகத்தை தொடர முடியும். நீண்ட ஆண்டுகளுக்கு பின் திண்டுக்கல் நகருக்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x