

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளப்பள்ளத்தில் வரி மறு மதிப்பீடு செய்யாததால் குடிநீர் இணைப்பு கிடைக்காமல் அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.
எம்.ஜி.ஆர். நகர் சூளப்பள்ளத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. அங்குள்ள வீடுகளுக்கு 2006-ம் ஆண்டு வரி மதிப்பீடு செய்யப்பட்டு, வரி நிர்ணயிக்கப்பட்டது.
அதன் பிறகு பலர் தங்களது வீடுகளை விரிவாக்கம் செய்துள்ளனர். அதாவது ஓலை வீடுகள் காரை வீடுகளாகவும், ஒரு தளம் கொண்ட வீடுகள் இரண்டு தளங்களாகவும் கட்டப்பட்டுள்ளன. இவர்களுக்கான மறு மதிப்பீடு இன்னும் செய்யப்படவில்லை.
பொது மக்கள் தாங்களாகவே மண்டல அலுவலகத்துக்கு சென்று மறு மதிப்பீட்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இப்பகுதியில் உள்ள பலர் அதை எப்படி செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
சரியான வரியை செலுத்தும் வீடுகளுக்கே புதிதாக தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படுகிறது. இதனால் பலருக்கு இணைப்பு கிடைக்கவில்லை.
நாகாத்தம்மன் கோயில் தெருவில் வசிக்கும் காயத்ரி கூறுகையில், “நாங்கள் முன்பு ஓலை வீட்டில் இருந்தோம். ஆனால் இப்போது தளம் அமைத்துள்ளோம். ஆனால் வரி மறு மதிப்பீடு செய்யவில்லை.
எனவே குடிநீர் இணைப்பு கிடைக்காமல் பொது குழாயில்தான் தண்ணீர் பிடித்து வருகிறோம். எனினும் தண்ணீர் வரி கட்டி வருகிறோம்” என்றார்.
அப்பகுதியில் வசிக்கும் விஜி கூறுகையில், “2006-ல்
மாநகராட்சி அதிகாரிகளே இங்கு வந்து அனைவருக்கும் வரி மதிப்பீடு செய்து தந்தனர். ஆனால் சென்ற ஆண்டு நாங்களே அலுவலகத்துக்கு சென்று எங்களது மறு மதிப்பீடு படிவத்தை சமர்ப்பித்துள்ளோம்” என்றார்.
அதே பகுதியில் வசிக்கும் ராஜா கூறுகையில், “சிலரிடம் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு சட்டத்துக்கு புறம்பாக இணைப்புகளை தருகின்றனர்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.ஜி.ஆர். நகர் பகுதி செயலாளர் ஜி. செல்வா கூறுகையில், “இங்கு பலர் மறுமதிப்பீடு செய்யப்பட்ட வரியை செலுத்த தயாராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு மறு மதிப்பீட்டுப் படிவங்களை எப்படி பூர்த்தி செய்து சமர்ப்பிப்பது என தெரியவில்லை. எங்கள் கட்சியின் மூலம் 30 பேருக்கு கடந்த ஆண்டு மறு மதிப்பீட்டுக்கான படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உதவி செய்தோம். மாநகராட்சி அதிகாரிகளே இதனை செய்தால் மாநகராட்சிக்கு முறையாக வர வேண்டிய வருவாய் வந்து சேரும். இதன் மூலம் திருட்டுத்தனமாக தண்ணீர் இணைப்பு பெறுவதை தவிர்க்கலாம்” என்றார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “மக்கள் தாங்களே வந்துதான் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்தால் ஒரு மாதத்துக்குள் மறு மதிப்பீடு செய்து தருவோம். அதிகாரிகள் மொத்தமாக மதிப்பீடு செய்வது என்பது கொள்கை முடிவை பொறுத்தது. எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்றார்.