

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தலைமையில் புதிய அரசியல் கட்சியை தொடங்க வேண்டும் என்று டாக்டர் அப்துல் கலாம் லட்சிய இந்தியா அமைப்பு பொன்ராஜூக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சேலம் ஞானபரஞ்சோதி பஞ்சபூத கல்வி நிலையத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ‘விஷன் 2020’ நிகழ்ச்சி நடந்தது. இதில், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், அப்துல் கலாம் லட்சிய இந்தியா அமைப்பின் தலைவரு மான பொன்ராஜ் தலைமை வகித்தார். .
இதில் பங்கேற்ற விஷன் இந்தியா தலைவர் செந்தூரான் மற்றும் பொதுமக்கள் பலரும் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தலைமையில் புதிய அரசியல் கட்சியை உருவாக்கி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தனர். இதற்கு பதில் அளித்து பொன்ராஜ் பேசிய தாவது:
அப்துல் கலாமின் தொலை நோக்கு திட்டமான ‘விஷன் 2020’ வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் பொக்கிஷம். தனி ஒருவரால் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. நாம் அனைவரும் இணைந்தே நல்ல தலைவர் களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே நமது பயணம் இருக்க வேண்டும்.
இந்த கருத்தே நம்மை அடுத்தக்கட்ட சிந்தனைக்கு எடுத்துச் செல்லும் என்பதால் அதுபோன்ற சூழல் வரும் நேரத்தில், அதற்கான முடிவை விரைந்து எடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.