Published : 30 Dec 2013 07:17 AM
Last Updated : 30 Dec 2013 07:17 AM

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி: பிரஷாந்த் பூஷண்

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி திகழும் என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷண் தெரிவித்தார்.



திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் கடந்த 2 ஆண்டுகளாக மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே ஆதரவு தெரிவித்துவரும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஞாயிற்றுக்கிழமை இடிந்தகரைக்கு வந்தார். அங்கு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசினார்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், ஜேசுராஜன், முகிலன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் குழுவுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்கும்.

உதயகுமாருக்கு அழைப்பு...

வருகிற மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது. கட்சி சார்பில் போட்டியிட நேர்மையானவர்களை தேர்வு செய்து வருகிறோம். கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் போன்றவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை ஆம் ஆத்மி கட்சி வரவேற்கும்.

தமிழக மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கை மோதல் போக்கை வளர்க்கும் வகையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் எதிரி நாடுகளையும் நட்பு நாடுகளாக மாற்றிவிடும்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நேர்மையான கட்சியை மக்கள் விரும்புகின்றனர். இதனால் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்திலும் தளிர்க்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x