

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருள்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னைப் புறநகர் மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு கோயம்பேடு நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படுகின்றன. ஆகவே பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். இங்கு வரும் பயணிகள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்லும் அவசரத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குடிநீர் பாட்டில், குளிர்பானம், சிப்ஸ்,பிஸ்கெட் உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்வது வழக்கம்.
இங்குள்ள கடைகளில் பல பொருட்களை வெளிச்சந்தையில் விற்கப்படும் அதிகபட்ச விலையை விட அதிகமாகக் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை உள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்கக் கூடாது என்று நுகர்வோர் சட்டம் சொல்கிறது.ஆனாலும் அதுபற்றி கவலைப்படாமல் இங்குள்ள கடைகள் செயல்படுகின்றன என்று பயணிகளும், நுகர்வோர்களும் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதுபற்றி தமீம் (25) என்ற பயணி கூறும் போது, “பொதுவாக ரூ.20 விலை உள்ள தண்ணீர் பாட்டில் ரூ.23க்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விற்கப்படுகிறது. தவிர, நொறுக்குத் தீனி வகைகள், குளிர்பானங்கள் என எல்லா பொருட்களின் விலையும் 10 முதல் 15 சதவீதம் அதிகமாகத்தான் விற்கப்படுகின்றன” என்றார்.
“சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் அவசர மனநிலையினை சாதகமாக்கிக் கொண்டு இங்குள்ள கடைகள் கூடுதலாக வசூலித்து வருகின்றன” என்கிறார் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இளைஞரான ஆனந்த்.
கல்லூரி மாணவி புவனா கூறுகை யில், “பேருந்து நிலையங்கள் என்றாலே உணவுப் பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கும் என்ற மனநிலைக்குப் பயணிகள் தள்ளப்படுகிறார்கள். கூடுதல் விலை பற்றி கேள்வி எழுப்பினால் விற்பனையாளர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை” என்றார்.
பயணிகளின் குற்றச்சாட்டுகள் பற்றி பேருந்து நிலையத்தில் உள்ள சிற்றுண்டிக் கடைகளில் கேட்டால், கடையின் மின்சாரச் செலவு, வாடகை ஆகியவற்றை கணக்கில் வைத்தே தண்ணீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகத் தெரிவிக்கின்றனர்.
உணவுப் பொருட்கள் தவிர, செல்போன் ரீசார்ஜ் சேவைகளுக்கும் செல்போன் நிறுவனங்கள் விதித்து உள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கின்றன இங்குள்ள கடைகள்.
“ரீசார்ஜ் கடைகளில் கட்டண விவரங்கள் பற்றிய அட்டைகள் கிடையாது. பொதுத்துறை நிறுவன மான பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் சேவைகளுக்கும் கூட கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது” என்றார் இன்னுமொரு பயணி. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பயணிகளின் எதிர்பார்ப்பு.