லாரி மீது கார் மோதி விபத்து: குழந்தை உட்பட 7 பேர் பலி

லாரி மீது கார் மோதி விபத்து: குழந்தை உட்பட 7 பேர் பலி
Updated on
1 min read

விழுப்புரத்தை அடுத்த உளுந்தூர் பேட்டை அருகே சாலையில் நின்றிருந்த மணல் லாரி மீது கார் மோதியதில் பெண் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அருள்வேதம் தனது குடும்பத்துடன் தூத்துக்குடி சென்றுவிட்டு சனிக்கிழமை பிற்பகல் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். காரில் ஓட்டுநருடன் மொத்தம் 13 பேர் இருந்தனர். அப்போது உளுந்தூர் பேட்டை எடைக்கல் அருகே சாத்தனுர் பகுதியில் சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த லாரி திடீரென்று நின்றதால், கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அருள்வேதம் (57), கார் ஓட்டுநர் டேவிட் எத்திராஜ் (34), ஜாப்லின்(60), சார்லஸ் (36) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஜெஸ்ஸிகா என்ற 5 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாள்.

காயமடைந்தவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக விழுப் புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் சுந்தர்ராஜன்(36), கீழ்ப்பாக் கத்தைச் சேர்ந்த கிங்ஸ்லி(40) ஆகியோர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் விவரம்

பலியான அருள்வேதத்தின் மனைவி இந்திரா (50), சார்லஸின் மனைவி மெஸ்ஸி(20), தீஸி(40), கிங்ஸ்லியின் மனைவி செனிட்டா(36), ஆவடியைச் சேர்ந்த ஜூஸியர் ஷெராம் (4), கிங்ஸ்லியின் மகன் ஜெஸ்ஸி (8) ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய கார் முற்றிலும் உருக்குலைந்து கிடந்தது. உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினர் காரை உடைத்து காயமடைந்தவர் களையும் இறந்தவர்களின் உடல்களையும் மீட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் கார் அகற்றப்பட்டது. இவ்விபத்து காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in